பெய்ரூட்: லெபனானின் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஏவுகணை பிரிவு தளபதி முஹம்மது அலி இஸ்மாயில், துணைத் தலைவர் ஹுசைன் அகமது இஸ்மாயில் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை இன்று தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல் பெய்ரூட்டில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. பல கட்டிடங்கள் சேதமடைந்தன. கடந்த ஓராண்டில் லெபனான் தலைநகர் மீது நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. இஸ்ரேல் ராணுவம் - ஹிஸ்புல்லா இடையே தீவிரமடைந்து வரும் மோதலானது இருதரப்பிலும் முழு அளவிலான போரை நோக்கி நகர்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
பெய்ரூட்டில் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 91 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலின் இலக்கு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா தான் என இந்த விவகாரத்தை நன்கு அறிந்த பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பல்வேறு முதன்முறை அம்சங்களால் கவனம் பெறும் அமெரிக்க அதிபர் தேர்தல்
இஸ்ரேல் ராணுவம் யாரை குறிவைத்தது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. ஆனால், இன்று மதியம் இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட தகவலில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. எனினும், ஹிஸ்புல்லா இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.
இத்தாக்குதலில் சேதமடைந்த 6 கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் குழுக்கள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றன. எனவே, பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என தெரிகிறது. பெய்ரூட் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு புறநகரின் பிற பகுதிகளில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் இந்த வாரம் லெபனானில் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியது. 11 மாதங்களுக்கும் மேலாக தனது எல்லைக்குள் ஹிஸ்புல்லாக்கள் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியாக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனான் சுகாதாரத் துறை அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, இதுவரையிலான தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 720-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, திட்டமிட்டதற்கு முன்பாக, அமெரிக்கா பயணத்தை முடித்துவிட்டு திடீரென நாடு திரும்பினார். முன்னதாக, அவர் ஐ.நா.வில் உரையாற்றியபோது, கடந்த இரண்டு வாரங்களாக ஹிஸ்புல்லாவுக்கு எதிரான இஸ்ரேலின் தீவிர தாக்குதல் தொடரும் என தெரிவித்தார். இது போர்நிறுத்தம் குறித்த நம்பிக்கையை மங்கச் செய்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்