மதீனா, சௌதி அரேபியா:அனைத்து இந்திய ஹஜ் பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் ஆன்மீகரீதியாக நிறைவான புனித யாத்திரை அனுபவத்தை உறுதி செய்வதற்காக, சௌதி அரேபியாவின் புனித நகரமான மதீனாவில் 2025 ஆம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை இந்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆய்வு மேற்கொண்டார்.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு ஜூன் 11 முதல் 14-ம் தேதி வரை வரை சௌதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட கிரண் ரிஜிஜூ, 2025-ம் ஆண்டில் ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
2025-ம் ஆண்டு ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல், ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு மற்றும் கண்காட்சியின் தொடக்க அமர்வில் கலந்து கொள்வது மற்றும் சௌதி முக்கிய பிரமுகர்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்துவது குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது, ஜெட்டா மற்றும் மதீனாவில் இந்திய ஹஜ் பயணிகளுக்காக செய்யப்படும் ஏற்பாடுகளையும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தார்.
"ஹஜ் ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், ரயிலில் மதீனாவின் புனித நகரத்திற்கு பயணம் மேற்கொள்ளவும் புனித அல் மஸ்ஜித் அல் நப்வியை பார்வையிடவும், இஸ்லாத்தின் முதல் மசூதியான குபாவை பார்வையிடவும் வருகை தருவேன்" என்று அப்போது அவர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், நடப்பாண்டுக்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிடவும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் மதீனாவிற்கு வந்தார். "அனைத்து இந்திய ஹஜ் பயணிகளுக்கும் சுமூகமான மற்றும் ஆன்மீகரீதியாக நிறைவான புனித யாத்திரை அனுபவத்தை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன்" என்று ரிஜிஜு X-ல் குறிப்பிட்டுள்ளார்.
"புனித நகரமான அல்-மதீனா அல்-முனாவ்வராவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியான 2-வது புனிதமான அல் மஸ்ஜித் அல் நபாவி மசூதியைப் பார்வையிட்ட பின் அவர் தனது X தளத்தில் மசூதி பின்னணியில் இருப்பது போன்ற படத்தை வெளியிட்டார்.
இந்திய ஹஜ் பயணிகளுக்காக இந்த ஆண்டு 1,75,025 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் சௌதி அரேபிய ஹஜ் மற்றும் உம்ரா துறைக்கான அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல்ரபியா இடையே கையெழுத்தானது.
ஜெட்டாவில் சௌதி ஹஜ் & உம்ரா அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ் & உம்ரா மாநாடு மற்றும் 4-வது கண்காட்சியின் தொடக்க அமர்விலும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார்.
சௌதி ஹஜ் & உம்ரா அமைச்சர் தவ்ஃபிக் பின் ஃபவ்ஸான் அல் ரபியா, ஹஜ்-2025க்கான ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நிறைவான அனுபவத்தை உறுதி செய்வதற்காக பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவர் ஒப்புக்கொண்டார்.
தனது பயணத்தின் போது, கிரண் ரிஜிஜூ ரியாத்தில் சௌதி போக்குவரத்து அமைச்சர் சலே பின் நாசர் அல் ஜஸ்ஸாரை சந்தித்து, இந்திய ஹஜ் பயணிகளுக்கு போக்குவரத்தை மேலும் மேம்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், அமைச்சர் கிரண் ரிஜிஜூ மதீனா மாகாணத்தின் துணை ஆளுநரும் இளவரசருமான சௌத் பின் காலித் பின் பைசல் அல் சௌத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, மதீனாவில் தங்கியிருந்த காலத்தில் இந்திய ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தார்.
தனது பயணத்தின் போது, போக்குவரத்து ஏற்பாடுகள், நிர்வாக அமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட இந்திய ஹஜ் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான மதிப்பாய்வை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மேற்கொண்டார்.
மதீனாவில், அவர் இந்திய ஹஜ் பயணிகள் அலுவலகத்தையும் பார்வையிட்டார். அவர் ஜெட்டா மற்றும் மதீனா விமான நிலையங்களின் ஹஜ் முனையங்களையும் பார்வையிட்டார், மேலும் யாத்ரீகர்களின் வருகை மற்றும் புறப்பாடு மற்றும் சாமான்களைக் கையாளுவதற்கான வசதிகளை ஆய்வு செய்தார்.