பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. இந்நிலையில், அங்குள்ள அதிவேக ரயில் லைன்களில் மர்ம கும்பல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேக ரயில் சேவையை துண்டிக்கும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் உள்ள ரயில்களில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பல்வேறு அதிவேக ரயில் தடங்களில் நாச வேலைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் ஒரு சில இடங்களில் ரயில் சேவை துண்டிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் ரயில் சேவைகளை பாதிக்கச் செய்யும் வகையில் மர்ம கும்பல் பல்வேறு ரயில் சேவை வழித்தடங்களில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் பல இடங்களில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டும், துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் அது கண்டனத்திற்கு உரியது என்றும் அந்நாட்டின் ரயில்வே அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் தெரிவித்து உள்ளார்.
அதேபோல் பிரான்ஸ் விளையாட்டு துறை அமைச்சர் அமேலி ஓடியா-காஸ்டெராவும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 33வது பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவின் தொடக்க நிகழ்வு சில மணி நேரங்களில் தொடங்க உள்ள நிலையில், இந்த ரயில் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:இஸ்ரேலுக்கு கமலா ஹாரீஸ் வார்னிங்.. "போரை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது" எனப் பேச்சு! - Kamala Harris