காத்மண்டு(நேபாளம்): நேபாள நாட்டில் பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. வழக்கமாக அந்நாட்டில் மழைகாலம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முடிவடைந்து விடும். ஆனால், இந்த முறை தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் காத்மண்டுவில் கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தவித்து வந்த 1,053 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக 32 பேர் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நேரிட்டதால் காத்மண்டுவின் ஒரு பகுதி வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் வீட்டின் மொட்டை மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நகரின் தென் பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முடியாத நான்கு பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். காத்மண்டுவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், இணைய வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக நாட்டின் பிற பகுதிகளில் நிலச்சரிவு நேரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.