நியூ ஓர்லியன்ஸ்:அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் மீது டிரக்கை மோதி தாக்குதல் நடத்தியதில் ஷம்சுத்-தின் ஜப்பார் என்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவருக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என்றும், ஐஎஸ் அமைபபால் ஈர்க்கப்பட்டு அந்த நபர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவரின் பின்னணியில் வேறு யாரும் இல்லை என்றும் எஃபிஐ புலனாய்வு அதிகாரிகள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய எஃபிஐ அதிகாரிகள்,"தாக்குதல் நடத்திய ஷம்சுத்-தின் ஜப்பார் டெக்சாஸ் மாநிலத்தை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்றவராவார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பு முகநூலில் ஐஎஸ் இயக்கத்தின் மீதான ஈர்ப்பின் அடிப்படையில் புகழ்பெற்ற பிரெஞ்சு குவார்டர் மாவட்டத்தில் விரைவில் வன்முறையில் ஈடுபட உள்ளதாக ஒரு தகவலை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்,"என்று கூறினர்.
இது குறித்து பேசிய தீவிரவாதத்துக்கு எதிரான எஃபிஐ நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் கிறிஸ்டோபர் ராயா, "இது ஒரு தீவிரவாத செயல். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தீமையான செயல், ஐஎஸ் இயக்கத்தின் மீதான முழுமையான ஈர்ப்பின் காரணமாக அந்த நபர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறார்"என்றார்.
போர்பன் தெருவில் நடந்த தாக்குதலில், தாக்குதலில் ஈடுபட்ட ஷம்சுத்-தின் ஜப்பாரையும் சேர்த்து 15 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலில் ஐஎஸ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு நடைபெற்ற மிகவும் மோசமான தாக்குதல் இதுவாகும்.
இதையும் படிங்க:அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை; ஆள் இல்லாததால் சோதனைக்காக காத்திருப்பு!
"நியூ ஓர்லியன்ஸ் பகுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கும், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள அதிபராகப் பதவி ஏற்க உள்ள டிரம்ப்புக்கு சொந்தமான ஹோட்டலுக்கு வெளியே நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை,"என்றும் ராயா கூறினார். தாக்குதல் நடத்துவதற்கான டிரக்கை டிசம்பர் 30ஆம் தேதி ஹூஸ்டன் பகுதியில் ஷம்சுத்-தின் ஜப்பார் வாடகைக்கு எடுத்திருப்பதாகவும், அதை அவரே நியூ ஓர்லியன்ஸ் பகுதிக்கு ஓட்டி வந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
தாக்குதல் நடத்தப்பட்ட டிரக்கில் இருந்து ஐஎஸ் இயக்கத்தின் கொடி ஒன்றையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். ஷம்சுத்-தின் ஜப்பார் கடந்த கோடைகாலத்துக்கு முன்பாக ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என்றும், அதன்படி அந்த இயக்கத்தில் கடைசி உறுதி மொழியையும் அவர் அளித்திருக்கிறார். அதற்கும் முன்னதாக கடந்த 2007ஆம் ஆண்டு ஜப்பார் அமெரிக்க ராணுவத்தில் மனித வளம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு முதல் 2010 வரை ஆப்கானிஸ்தானுக்கு அவர் பணி மாறுதல் செய்யப்பட்டார். ஸ்டாப் சர்ஜென்ட் ஆக இருந்த ஜப்பார் கடந்த 2020ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விலகினார்.
இதனிடையே அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய ஷம்சுத்-தின் ஜப்பார் சகோதரர் அப்துர் ரஹ்மான் ஜப்பார், "இந்த தாக்குதலை என் சகோதரர் செய்திருக்கிறார் என்று உண்மையில் நம்ப முடியவில்லை. இப்படி ஒரு சிந்தனையில் அவர் இருப்பார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் என அவரைப்பற்றி அறிந்தவர்களுக்கு அவரின் இந்த செயல் முற்றிலும் முரண்பாடாக இருப்பதாக தோன்றுகிறது. அவரின் இந்த நடவடிக்கை அவரின் தன்மையில் இருந்து மாறுபட்டதாக இருக்கிறது."என்றார்.