சென்னை: புகழ் பெற்ற சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களின் சேவைகள் கடந்த சில மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி இருந்தன. இதனால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில், பேஸ்புக் சேவை மட்டும் மீண்டும் இயங்கத் தொடங்கி உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களின் சேவைகள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முடங்கி உள்ளது. இதனால், பயனர்கள் லாக் -இன் செய்வதோ அல்லது லாக் அவுட் செய்யவோ முடியாமல் திணறி வருகின்றனர்.
பலர், இதனை ஸ்கிரின் ஷாட்டாக எடுத்து எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின்படி, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்கள் 7.32 மணி முதல் முடங்கத் தொடங்கி 9 மணியளவில் முடக்கம் உச்சம் பெற்றது.
அதேநேரம், இன்ஸ்டாகிராமை பயன்படுத்த முடியவில்லை என 3.5 லட்சம் பயனர்கள் புகார் அளித்து இருக்கின்றனர். அதேபோல், 3 லட்சத்து 53 ஆயிரம் பயனர்கள் பேஸ்புக்கில் பிரச்னைகளைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 70 சதவீத பயனர்கள் இன்ஸ்டாகிராம் செயலி சேவையில் பிரச்னையைச் சந்தித்து இருக்கின்றனர். அதில், இன்ஸ்டாகிராம் Feed-இல் 27 சதவீதம் பேரும், இன்ஸ்டாகிராம் லாக்-இன் செய்வதில் 10 சதவீதம் பேர் இடரைச் சந்தித்துள்ளனர்.
அதேபோல், 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் பேஸ்புக்கில் லாக் இன் செய்யும்போது பிரச்னையைச் சந்தித்ததாகவும், அவர்களில் 27 சதவீதம் பேர் பேஸ்புக் செயலியிலும், 10 சதவீதம் பேர் பேஸ்புக் தளத்திலும் சேவை முடக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தொடர்பு அதிகாரி ஆன்டி ஸ்டோன், தொழில்நுட்ப பிரச்சனையால் மெட்டா (பேஸ்புக்கின் தாய் நிறுவனம்) சேவைகள் பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் பின்னர் இது சரி செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், பேஸ்புக் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. இதனிடையே, எலான் மஸ்க் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “நீங்கள் இந்த பதிவைப் படிக்கிறீர்கள் என்றால், எங்கள் சர்வர்கள் வேலை செய்வதால்தான்” என நக்கலாக பதிவிட்டு உள்ளார்.