டெல்லி : உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா வாகன உற்பத்தி நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியா வருவதாக இருந்தது. இந்த பயணத்தின் போது அவர் பிரதமர் மோடியை சந்திக்க அவர் திட்டமிட்டு இருந்தார். முன்னதாக கடந்த வாரம் எலான் மஸ்க் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
மேலும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி மையத்தை இந்தியாவில் தொடங்க எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அது குறித்தும் பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது எலான் மஸ்க் ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்ததாக தகவல் கூறப்படுகிறது.
இதனிடையே, டெஸ்லா நிறுவனத்திற்கு சாதமாக அமையும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் நிறுவனங்களின் கார்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல், இந்த சுற்றுப்பயணத்தின் இடையே அதிவேக இணைய தொடர்புக்கான ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்தியாவில் தொடங்குவதற்கான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.