புதுடெல்லி: இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏகவுகனை தாக்குதலை தொடங்கியிருப்பதன் மூலம் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்னில் சிந்தனை அரங்கு நிகழ்வில் உரையாற்றிய ஜெய்சங்கர், "லெபனானில் என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல, இது தவிர ஹவுதி, செங்கடல் ஆகியவற்றில் இந்த மோதல் விரிவடையும் சாத்தியம் உள்ளதாக நாங்கள் கவலைப்படுகின்றோம். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே எதுவேண்டுமானாலும் நடக்கக்கூடும்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை இந்தியா புரிந்திருக்கிறது. ஆனால், எந்த ஒரு நாடும், எந்த ஒரு பதில் நடவடிக்கையில் ஈடுபடும் போதும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை கருத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு எந்த ஒரு சேதமோ அல்லது பாதிப்புகளோ ஏற்படுவது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதில் ஒரு விதமான சர்வதேச மனிதாபிமான முயற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.
இதனிடையே, வாஷிங்க்டன்னில் செவ்வாய்கிழமையன்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும், இருதரப்பு உறவுகள் குறித்தும் பிராந்திய, சர்வதேச அளவிலான சாவல்களை எதிர்கொள்வதில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.