நியூ ஓர்லியன்ஸ்(அமெரிக்கா):லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லியன்ஸ் கால்வாய் மற்றும் போர்பன் தெருவில் திரண்டிருந்த மக்கள் மீது வாகனம் ஒன்று மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது புத்தாண்டு அன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஓர்லியன்ஸின் பிரெஞ்சு குவார்டர் மாவட்டத்தில் கால்வாய் மற்றும் போர்பன் தெருவில் திரண்டிருந்த மக்கள் மீது அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணிக்கு அதி தீவிர வேகத்தில் சென்ற வாகனம் மோதி 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீவிரவாத தாக்குதல்?:புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதி போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். புத்தாண்டு முந்தைய விருந்துகளுக்கு புகழ் பெற்ற போர்பன் தெருவில் புத்தாண்டு பிறந்த சில மணி நேரத்தில் அதாவது அதிகாலை 3.15 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு லூசியானா மாகாண ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:2024ஆம் ஆண்டு: உலக நாடுகளில் ஆட்சி மாற்றங்களை கொண்ட தேர்தல்கள்!
இது குறித்து பேசிய காவல்துறை ஆணையர் அன்னே கிர்க்பாட்ரிக்,"வாகனத்தை இயக்கியவர் தீவிரமான வேகத்துடன் படுகொலை மற்றும் சேதத்தை உருவாக்கியுள்ளார். மிகவும் திட்டமிடப்பட்ட நடத்தையாகத் தெரிகிறது. எவ்வளவு பேர் மீது வாகனத்தை ஏற்றிக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேர் மீது வாகனத்தை ஏற்றி ஓட்டுநர் கொன்றுள்ளார்," என்று கூறியுள்ளார். எனினும் வாகன ஓட்டுநரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை.
இது குறித்து பேசிய நியூ ஓர்லியன்ஸ் கள அலுவலகத்தின் எஃப்பிஐ புலனாய்வு அமைப்பின் உதவி சிறப்பு ஏஜென்ட் பொறுப்பாளர் அலேத்தியா டங்கன், "சம்பவம் நடைபெற்ற இடத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் வெடிகுண்டு பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,"என்று கூறியுள்ளார்.
நகரின் அவசரகால தயாரிப்பு துறையின் சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், இந்த தாக்குதலில் காயம் அடைந்தோர் ஐந்து உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மிக விரைவில் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.