ஒட்டாவா:இந்திய அரசின் சார்பாக லாரன்ஸ் பிஷோனி கூலிப்படையினர் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைத்திருப்பதாக கனடா போலீஸ் கூறியிருப்பதை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் மோசம் அடைந்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கனடாவின் மத்திய காவல்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு, ராயல் கனடியன் மவுண்டட் போலீசின் உதவி ஆணையர் பிரிஜிட் கவுவின்,"இந்தியாவின் ஏஜென்ட்கள், காலிஸ்தான் ஆதரவு தனிநபர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்களை பயன்படுத்துகிறது. இந்த நபர்கள் ஆசிய சமூகத்தை சேர்ந்த காளிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றனர்.
விசாரணையின் ரகசிய தன்மை மற்றும் விசாரணை சரியான திசையில் செல்ல வேண்டும் என்பதால் இது குறித்து மேலும் விவரங்களை வெளியிட முடியாது. எனினும், குறிப்பாக கனடாவில் பிஷோனி என்ற கூலிப்படையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். ஒருங்கிணைந்த குற்றங்களில் ஈடுபடும் கூலிப்படைக்கு இந்திய அரசின் ஏஜென்ட்களுடன் தொடர்பு இருக்கிறது,"என்றார்.
முன்னதாக இந்த விவகாரத்தில் பேட்டியளித்த ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் கமிஷனர் மைக் டுஹீம், "இந்திய அரசின் ஏஜென்ட்கள் சில குற்றச் செயல்களை மேற்கொண்டிருப்பதாக சில தகவல்கள் கிடைத்திருக்கிறது," என்று கூறியிருந்தார். இதன் பின்னரே இந்தியா-கடனா இருதரப்பிலும் தூதரக அதிகாரிகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.