சிகாகோ : கொல்கத்தாவை சேர்ந்த பரதநாட்டியம் மற்றும் குச்சுபிடி நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், அமெரிக்காவின் சிகாகோவில் தங்கி முனைவர் பட்டத்திற்காக தயாராகி வந்து உள்ளார். இந்நிலையில், மாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரங்கலை தெரிவித்து உள்ள சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம், அமர்நாத் கோஷ் படுகொலை வழக்கில் தடயவியல் சோதனை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், வழக்கு விசாரணைக்கு போதிய ஆதரவை போலீசாருக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை தேவோலீனா பட்டாசார்ஜி, இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் மற்றும் வெளியுறைவு அமைச்சர் ஜெய் சங்கர் தலையீட்டு விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தேவோலீனா பட்டாசார்ஜி, கொல்கத்தாவை சேர்ந்த அமர்நாத் கோஷ் பரதநாட்டியம் மற்றும் குச்சுபிடி கலையில் சிறந்த கலைஞர் என்றும்,
தாய் மற்றும் தந்தையை இழந்த அமர்நாத் கோஷ் அமெரிக்காவில் முனைவர் பட்டத்திற்காக தயாராகி வந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்து உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இந்திய தூதரகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தலையீட்டு விசாரணை நடத்த வேண்டும் என அந்த பதிவில் கோரி உள்ளார்.
அண்மைக் காலமாக அமெரிக்காவில் இந்திய வம்சாவெளியினர் மற்றும் இந்தியர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 2024ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்களே நிறைவடைந்து உள்ள நிலையில், இதுவரை 5 இளைஞர்கள் வெவ்வேறு இடங்களில் அமெரிக்காவில் படுகொலை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வாஷிங்டனில் 41 வயதான விவேக் தனேஜா என்பவர் மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி இதே சிகாகோவில் இந்திய மாணவர் சையது மசாஹிர் அலி கொடூரமாக கொல்லப்பட்டார். இப்படி அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான வன்முறை தொடர் கதையாகி வருகிறது.
இதையும் படிங்க :ஸ்பெயின் பெண் கூட்டுபாலியல் வன்கொடுமை! சுற்றுலா வந்தவருக்கு நேர்ந்த கொடூரம்!