அமெரிக்கா:அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கடந்த 21ஆம் தேதி அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அதிபர் ஜோ பைடன் அறிவித்ததை அடுத்து, அதிபர் வேட்பாளாராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்தியா உட்பட உலக நாடுகளே இந்த தேர்தலை உற்று நோக்கி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆதரவு கமலா ஹாரிஸுக்கு கிட்டுமா என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் அமெரிக்க மக்களிடையே எழுந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல் ஒபாமாவும் கமலா ஹாரிஸை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு தங்களது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.
அதுகுறித்த வீடியோவை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒபாமா, “கமலா ஹாரிஸை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இது வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும். உங்களது வெற்றிக்காக நானும், மிச்செலும் முடிந்த அனைத்தையும் செய்வோம். அதிபர் அலுவலகத்துக்கு உங்களை அழைத்துச் செல்ல முழு ஆதரவை செலுத்துவோம்'' என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்த கமலா ஹாரிஸ் தேர்தலுக்கு முன்பு உங்களோடு பிரச்சாரம் செய்ய ஆவலாக இருக்கிறேன்'' என கூறினார்.