தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கனடாவை அமெரிக்காவுடன் இணைத்து விடுங்கள்...ட்ரூடோவுக்கு டிரம்ப் யோசனை! - CANADA 51ST STATE OF US

கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருக்கிறார். தமது கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் (Image credits-ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 12:20 PM IST

வாஷிங்டன்:கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று அறிவித்திருக்கிறார். தமது கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் இது குறித்து பேசிய அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

கனடா பொதுத்தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள நிலையில் நாளுக்கு நாள் பிரதமர் ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்து வருகிறது. அவரது லிபரல் கட்சிக்குள்ளும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த நிலையில் ட்ரூடோ 6ஆம் தேதியன்று பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். புதிய பிரதமரை தமது கட்சியினர் தேர்வு செய்யும் வரை பிரதமர் பதவியில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், இதற்கு முன்பு கடந்த 2017-21ஆம் ஆண்டு காலத்தில் அதிபராக இருந்தபோது கனடாவுடன் அவர் சுமுகமான உறவு கொண்டிருக்கவில்லை. குறிப்பாக ட்ரூடோவுடனும் அவர் நட்பு பாரட்டியதில்லை. கடந்த நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ட்ரூடோவை சந்தித்த டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைப்பதற்கான யோசனையை அவரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து டொனால்டு டிரம்ப் தம்முடைய சமூக வலைதள பக்கங்களிலும் இது குறித்து கருத்துகளை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க:திபெத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் 53 பேர் பலி! இந்தியாவிலும் உணரப்பட்ட நிலநடுக்கம்

இந்த நிலையில் தம்முடைய ட்ரூத் சமூக ஊடகதளத்தில் மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், "அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா தேர்வு செய்யப்படுவதற்கு கனடா மக்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவும் பெரும் அளவுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்வதில், மானியம் அளிப்பதில் பாதிப்பு அடையாது. கனடாவும் தொடர்ந்து நிலைத்து நீடித்திருக்கும். ட்ரூடோவுக்கு இவையெல்லாம் தெரியும். எனவே பதவி விலகி உள்ளார்,"என்று கூறியுள்ளார்.

"கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறைக்கப்படும். தொடர்ந்து கனடாவை சுற்றி நிற்கும் ரஷ்யா, சீனா கப்பல்களின் மூலம் விடுக்கப்படும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கலாம். அமெரிக்காவுடன் இணையும் பட்சத்தில் ஒரு சிறந்த தேசமாக திகழும்,"என்றும் கூறியுள்ளார்.

ஆனால் டிரம்ப்பின் இந்த முன்மொழிவு குறித்து கனடா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. கனடாவின் தெற்கு எல்லை பகுதியில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோத குடியேற்றம் செய்வது, போதைப் பொருட்கள் ஆகியவற்றை செல்ல அனுமதிப்பது ஆகியவற்றை நிறுத்தாவிட்டால், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகித கட்டணம் விதிக்கப்படும் என்று டிரம்ப் அச்சுறுத்தி உள்ளார். மேலும், ட்ரூடோ கனடா மாகாணத்தின் ஆளுநர் என்றும் டிரம்ப் சில பதிவுகளில் ட்ரூடோவைகிண்டல் செய்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details