டனா டோராஜா :இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏறத்தாழ 14 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள சுலவேசி தீவில் சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள டனா டோராஜா மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் நிலச் சரிவு ஏற்பட்டது. மலைப் பகுதியில் இருந்து மண் சரிந்த நிலையில், 4க்கும் மேற்பட்ட வீடுகள் கற்குவியல்களுக்குள் மூடிக் கொண்டன. மேலும் பல்வேறு இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டு உள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு பகுதிகள் தனித் தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன. நிலச் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர். டஜன் கணக்கிலான ராணுவ வீரர்கள், மீட்பு படையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 வயது சிறுமி உள்பட இரண்டு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாகேள் மற்றும் தெற்கு மாகேள் கிராமங்களில் 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்து உள்ளனர். மோசமான வானிலை காரணமாக தொலைத் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
வீடுகளில் சிக்கிக் கொண்டர்வர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.
சீசன் காரணமாக இந்தோனேஷியாவில் கனமழை கொட்டித் தீர்த்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிக்கடி கனமழையால் இந்தோனேஷியாவில் நிலச்சரிவுகள் மற்றும் இயற்கை பேரிடர்கள் நிலவுகின்றன. ஏறத்தாழ 17 ஆயிரம் தீவுகளால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தோனேஷியாவில் லட்சக்கணக்கான மக்கள் மலைப் பிரதேச பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் கடைபிடிக்க வழிகாட்டு நெறிமுறைகள் - இந்திய தூதரகம் வெளியீடு! - Iran Israel War