தென் ஆப்பிரிக்கா: ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, தென் ஆப்பிரிக்காவின் மோரியா நகரில் உள்ள சியோனிச கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்று வரும் ஈஸ்டர் ஆராதனையில் கலந்துகொள்ள, தென் ஆப்பிரிக்காவில் உள்ள பல்வேறு பகுதியில் இருக்கும் கிறிஸ்துவ மக்கள் வருகை தருவார்கள்.
அப்படி, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று மாமட்லகலா பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் இருந்து மோரியாவில உள்ள லிம்போபோவில் நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட நேற்று, பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.
அப்போது, பேருந்து மாமட்லகலா பகுதியில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த 165 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலுமாக எறிந்து சேதமான நிலையில், பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதிர்ஷ்டவசமாக 8 வயது குழந்தை மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு லிம்போபோ பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பலரது உடல்கள் பேருந்தின் அடிப்பகுதியில் சிக்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.