பெஷாவர் :பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கப்பட்ட பின் ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணாங்களால் ஆட்சியை விட்டு வெளியேறினார் ஷெபாஸ் ஷெரீப்.
இதையடுத்து காபந்து அரசு அமைக்கப்பட்டு, நாடாளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று (பிப். 8) காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் வகையிலான சம்பவங்களும் பாகிஸ்தானில் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. நேற்று (பிப். 7) பலூசிஸ்தான் மாகாணத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாகுதலில் ஏறத்தாழ 24க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.