காபி மற்றும் டீ குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய கோளாறு குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர். பிரநீதா கருத்து (video credit-ETV Bharat Tamil Nadu) சென்னை:காபியே உங்களுக்கு ’ஸ்ட்ரஸ் பஸ்டரா’, காபி பிரியர்களை உஷாராக இருங்கள். ஒரு நாளில் மூன்றுக்கு அதிக முறை காபி குடித்தால் அல்சர், மலச்சிக்கல் மற்றும் குமட்டல் நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர்.பிரநீதா கூறியுள்ளார்.
காபி, டீ-க்கு அடிமை ஆகாதீர்கள்:ஆப்பிரிகாவில் 14 ஆம்நூற்றாண்டில் கல்டி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது காபி. இதன் துணைப் பொருள்கள் மற்றும் ருசியால் இன்ஸ்டண்ட் காபி, பில்டர் காபி, கோல்ட் காபி, எஸ்ப்ரஸோ, கேப்பச்சினோ, லாட்டே, மச்சியாட்டோ, ஐரிஷ், ட்ரசிஸ் என பல வகைகளாக உருவெடுத்துள்ளது. அன்று ஒரு காபி குடிக்கும் பழக்கம் மாறி, இன்று விருப்பப்பட்ட நேரத்தில் கணக்கில்லாமல் காபி, டீ குடிக்கும் பழக்கத்தை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
பெட் காபி, டீக்கு நோ சொல்லுங்கள்: காலையில் எழுந்தவுடன் ஒரு மணி நேரத்திற்குப் பின் தான் காபி, டீ குடிக்க வேண்டும். தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் அன்றைக்கு தேவைப்படும் பல்வேறு ஹார்மோன்களை உடல் சுரக்கிறது. இந்த நிலையில், காபி, டீ போன்றவற்றை உட்கொள்வதால் உடல் சீரான அளவில் ஹார்மோன்களை தக்க வைப்பதில் பிரச்சினை ஏற்படுவதாக கூறுகிறார் டாக்டர்.பிரநீதா.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுவது என்ன?மேலும், அவர் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்புவரை காபி, டீயை எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளார். இந்திய மருத்துவ சங்கத்தின் ஆலோசனைப்படி காபி, டீ-ஐ உணவு சாப்பிடுவதற்கு முன் அருந்துவதால் காபி, டீயில் இருக்கும் காஃபின் போன்ற பொருட்கள் உணவில் இருக்கும் சத்துகளை உடல் எடுக்க விடாமல் தடுக்கின்றது.
எனவே, சாப்பிடும் உணவில் இருக்கும் விட்டமின், நார்ச்சத்துகள் வீண்போக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், காபி, டீயில் இருக்கும் காஃபின், சிக்கரி போன்ற பொருட்கள் தூக்கம் வராமல் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளதால் மன அழுத்தம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினை உள்ளவர்கள் மாலை 4 மணிக்குள் காபி, டீ யை அருந்துவது நல்லது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைபடி, பால் இல்லாமல் காபி, டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது என்கின்றனர். மேலும், பால் இல்லாமல் காபி, டீ குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படச் செய்வதுடன், இருதய நோய் மற்றும் வயிற்று புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:விவாதத்துக்குள்ளாகிய செறிவூட்டப்பட்ட அரிசி நல்லதா? கெட்டதா? உணவியல் ஆலோசகர் கூறுவது என்ன?