சென்னை:மனித தலைமுறையை அடுத்த கால கட்டத்திற்குக் கொண்டு செல்லப் பெண்களின் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். இன்றைய காலத்தில் வாழ்வியல் மாற்றம், ஆரோக்கியம் அற்ற உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்கள் உடலில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
மருத்துவ ஆராய்ச்சியின் அடிப்படையில் 35 வயதைக் கடக்கும் போதே ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறையும். ஆனால் இன்றைய சூழலில் 35 வயதிற்கும் குறைவான ஆண்களுக்குக்கூட இந்த பிரச்சனை வரத்தொடங்கி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஹியூமன் ரீபுரோடக்ஷன் அப்டேட் என்ற இணையதளப் பக்கத்தில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த கட்டுரையில், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு காலகட்டத்தில் மனித இனம் அழிந்து விடும் அளவுக்குச் சிக்கல்கள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை அடிக்கோடிட்டுக்காட்டி பிரபல செய்தி நிறுவனமும் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: கருவுறுதல் பற்றிய கட்டுக்கதைகளும்.. உண்மைகளும்..!
நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு விவரம்:அதேபோல, நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வுக்கட்டுரையில் கடந்த 37 ஆண்டுகளில் ஆண்களின் விந்தணு தரம் வெகுவாக குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதாவது கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் கடந்த 2016-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தகவல்களைப் பகிர்ந்து வந்தன.
இதன் அடிப்படையில், அது குறித்து நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வில் குழைந்த பெற்ற ஆண்களை உட்பட மலட்டுத்தன்மை உடைய ஆண்கள் சுமார் 13 ஆயிரம் ஆண்களின் விந்தணுக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ஆண்களின் விந்தணுவின் தரம் படிப்படியாகக் குறைந்து வருவது தெரிய வந்துள்ளது. மேலும் ஆரோக்கியமான விந்தணுக்களுடன் ஒப்பிடும்போது மலட்டுத்தன்மை உடைய விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக்காணப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டோடு 2024-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இளைய தலைமுறையினர் மத்தியில் ஆரோக்கியம் அற்ற வாழ்வியல் நடைமுறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலை காலப்போக்கில் ஆரோக்கியம் அற்ற சமுதாயத்திற்கு மனிதக் குலத்தை அழைத்துச்செலும் சூழல் உருவாகி வருவதாக மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.