ஹைதராபாத்:வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரம் என்றால் காலையில் வரும் சூரிய ஒளி தான். ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால் காலையில் வரும் சூரிய ஒளியை பார்க்க கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அத்தி பூத்தாற் போல, என்றாவது ஒரு நாள் காலையில் எழுந்தால், "சூரியனை பார்த்து எத்தனை நாளாச்சு" என கண்டிப்பாக சொல்லிவிடுவோம்.
ஆனால், உண்மையை சொல்ல போனால், வைட்டமின் டி குறைபாட்டால் சிறிய எலும்பு பிரச்சனை முதல் பெரும் பிரச்சனைகள் என எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும், மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை. இப்படியான சந்தர்பங்களில் இயற்கையாகவே வைட்டமின் டி எப்படி பெறலாம்? என்பதை தெரிந்து கொள்வோம்.
மீன்:தேசிய சுகாதார நிறுவன அறிக்கையின் படி, கொழுப்பு நிறைந்த சால்மன், சூரை, கானாங்கெளுத்தி, மத்தி ஆகியவற்றில் கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின் டி நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் மீன் வகைகளை உட்கொள்வதால் வைட்டமின் டி குறைபாட்டை தடுக்கலாம்.
காளான்கள்: வெயிலில் வளரும் சில வகை காளான்களில் அதிகளவு வைட்டமின் டி இருப்பதாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லட்சுமி கிலாரு கூறுகிறார். மேலும், இதில், கால்சியம், பி1,பி2,பி5 மற்றும் தாமிரம் (Copper) இருப்பதால், இவற்றை மழைக்காலத்தில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.
முட்டை: வைட்டமின் டி பெற முட்டை ஒரு சிறந்த வழியாகும். இதில், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளடக்கம் அதிகமாக உள்ளதால், தினசரி ஒரு முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.