சென்னை: பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, வெறிநாய் கடி, போன்ற கொள்ளை நோய்கள் பரவுவதைத் தடுக்க உடனடியாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநரகத்திற்குத் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தொற்று நோய் பரவலைப் பற்றி பொது மக்கள் தாங்களாகவே முன்வந்து சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம் (IHIP), ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் இணையதளத்தை ( IDSP) மறுசீரமைப்பு செய்யப்பட்டுத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் S, P மற்றும் L ஆகிய மூன்று படிவங்கள் உள்ளன. சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் பெறப்பட்ட தொற்றுநோய் குறித்த தகவல்கள் இந்த படிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டு தொற்றுநோய் பரவல் தடுப்பு, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான விரைவு நடவடிக்கை குழுக்கள் மூலம் (Rapid Response Team) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.