சென்னை:குழந்தையை வளர்ப்பது எளிதான காரியமா?.. கண்டிப்பாக இல்லை. ஒரு குழந்தையைச் சமாளிப்பது எவ்வளவு கடினமான செயல் என்று தெனாலிராமன் கதையில் படித்துள்ளோம். சிறந்த பேரண்டிங் என்பது, குழந்தையின் அழுகையை நிறுத்துவது மட்டுமில்லாமல் குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லித் தந்து, குழந்தைகளை கடைப்பிடிக்க வைப்பதுவும் தான்.
பொதுவாகப் பெற்றோர்கள் குழந்தைக்கு நல்ல பழக்கவழக்கங்களை வாய்மொழியாக கற்றுக்கொடுக்கின்றனர். குழந்தைகள் நாம் வாய்மொழியாகச் சொல்லிக் கொடுக்கும் பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வதை விட, அவர்களைச் சுற்றி நடக்கும் விசயங்களிலிருந்தே அதிகமாகக் கற்றுக்கொள்கின்றனர். மூத்த மனநல மருத்துவர் வீணா கிருஷ்ணன், பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுப்பதை, குழந்தைகள் கற்றுக்கொள்ளாமல் இருப்பர்.
ஆனால் பெற்றோர்களின் நடவடிக்கையைக் குழந்தைகள் கண்டிப்பாக கற்றுக்கொள்வார்கள். ஆகவே பெற்றோர்கள் தங்களின் நடவடிக்கையில் மிகுந்த கவனம் கொண்டு, நேர்மறையாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தைகள் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்வர்” என்றார்.
எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறீரோ, அதை உங்களது நடவடிக்கையின் மூலம் காட்டுங்கள். அதையே குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள். சிறந்த பேரண்டிங்கிற்கு நிபுணர்கள் பல்வேறு குறிப்புகளைப் பரிந்துரைக்கின்றனர். அவற்றில் சில,
- குழந்தைகளுக்காகப் பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி, அவர்களிடம் பேசுங்கள். குழந்தைகள் பேசுவதைக் கவனமாகக் கேளுங்கள். இது பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையிலான பிணைப்பை அதிகப்படுத்தும்.
- குழந்தையின் அணுகுமுறை, நடத்தையைக் கவனியுங்கள். அவர்களின் நல்ல அணுகுமுறை மற்றும் நடத்தைக்குப் பாராட்டுங்கள். குழந்தைகளின் கெட்ட நடத்தைக்காக, அவர்களைத் தண்டிக்காமல், கோபமாகப் பேசாமல், அவர்களுக்குச் சரி எது? தவறு எது? என்று சரியாக விளக்கமளியுங்கள்.
- உங்கள் குழந்தைகளைத் திட்டும் போது அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.
- குழந்தைகளுக்குப் பகிர்ந்து கொள்ளும் பண்பைக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்.
- பெற்றோர்கள் தங்களது பணி அழுத்தத்தின் காரணமாக ஏற்படும் விரக்தியைக் குழந்தையிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இந்த நடவடிக்கை உங்கள் குழந்தைகளைக் கோபமானவர்களாகவும், பிடிவாத குணமுள்ளவர்களாகவும் மாற்றும். மேலும் குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் அவமரியாதையாகவும் நடந்து கொள்ள வழிவகுக்கும்.
- பெற்றோர்கள் தங்களது குழந்தையிடம் ஏதாவது விளக்கமளிக்க விரும்பினால், முதலில் குழந்தையின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதன் பின் அவர்களிடம் பேசுங்கள். இயன்றவரைக் குழந்தையிடம் கத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- ஏதாவது ஒரு செயல் அல்லது கலை போன்றவற்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அவற்றை அவர்களே செய்ய வேண்டும் விட்டுவிடுங்கள். முதலில் செய்வதற்குச் சிரமப்பட்டாலும், விரைவில் அவர்களே கற்றுக்கொள்வர்.
- குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களை, நேர்மறையாக எதிர்கொள்ளக் கற்றுக்கொடுங்கள். எவ்வளவு பெரிய சவால்களையும் நேர்மறையாக எதிர்கொள்பவர்கள், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
- பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிகப்படியான கட்டுப்பாடு குழந்தையின் வளர்ச்சியைத் தடுக்கிறது. ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தையிடம் நல்ல நண்பர்கள் போலவே பழக வேண்டும்.
- குழந்தைகளின் கருத்தும், பெற்றோர்களின் கருத்தும் ஒருமித்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உங்களைப் போலவே உருவாக்க முயற்சிக்காதீர்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க:உங்க குழந்தையும் மொபைல் அடிக்ட்டா?... இந்த வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்!