சிட்னி: பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகரான சம உரிமை வேண்டும் என்பது வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்து வந்த சூழலில், தற்போது அது குறித்த புரிதல்களும், செயல்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் இருவருக்கும் தங்களது உடல் குறித்த கல்வி, முறையாகக் கற்பிக்கப்பட வேண்டும் என கல்வி நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுகள் பாரபட்சமின்றி மாணவ, மாணவியர் இருவருக்கும் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் மாணவ, மாணவியர்களிடம் பேசப்படுகிறது. இதனால், தொடர்ந்து குடும்பங்களுக்குள்ளும் மாதவிடாய் குறித்த விவாதங்கள் நடக்கத் தொடங்கியுள்ளது. இது ஒரு நேர்மறையான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
மாதவிடாயானது ஒரு பெண்ணுக்கு தன் 10-12 வயதில் தொடங்கி 40-45 வயதில் முடிவடைந்து விடுகிறது. இதன் பின்னர், பெண்கள் எந்த தொந்தரவுகளுமின்றி மகிழ்ச்சியாகத் தினசரி வாழ்க்கையை அனுபவிப்பார்களா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
கிட்டத்தட்ட தன் வாழ்நாளில் 30 ஆண்டுகளுக்கு மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்கள். அதன் பின்னர் அவர்களது, 40-60 வயதில் மெனோபாஸ் எனும் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்த புரிதல்கள் பெண்களிடமே அதிக அளவில் இருப்பதில்லை. பெண்கள் 40 - 60 வயது காலகட்டத்தில் அவர்களது வழக்கமான மாதவிடாய் நின்று விடுகிறது. இதனால், அவர்களது உடலில் பல சோர்வுகள், அசெளகரியங்கள், தொந்தரவுகள் ஏற்படுகிறது. இந்நிலையில், மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்களான மைக்கேல் ஓ'ஷியா, டேனியல் ஹோவ், மைக் ஆர்மர் மற்றும் சாரா டஃபி ஆகியோர் மெனோபாஸ் அறிகுறிகள் குறித்து விளக்கியுள்ளனர்.
மெனோபாஸ் பெண்களின் பணி வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பது பல காலங்களாக மறைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், ஆஸ்திரேலியா பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மெனோபாஸ் குறித்து வெளிப்படையாகப் பேசியதைச் சுட்டிக்காட்டி இது மாறத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளனர். மெனோபாஸால் பொருளாதார, உடல், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக ஏற்படும் விளைவுகளை ஆராய ஒரு விசாரணையை ஆஸ்திரேலியா பாராளுமன்றம் எடுத்துள்ளது.
மெனோபாஸ் அறிகுறிகள்:முகம், கழுத்து, மார்புப் பகுதிகளில் திடீர் வெப்பத்தை உணர்தல், பிறப்புறுப்பில் உலர் தன்மை, தோல் கருமையடைதல், தலைவலி, உணர்வுகளில் திடீர் மாற்றம், அதிக முடி உதிர்தல், பதட்டம், மனச்சோர்வு ஆகிய அறிகுறிகளுடன் அசௌகரியத்தை உணர்கின்றனர். சுமார் 25% பெண்கள் தங்கள் அன்றாட வேலை வாழ்க்கையை ஆழமாகப் பாதிக்கும் அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள். இந்த உணர்வுகளைக் கடக்கப் பெண்கள் மிகவும் போராடி வருகின்றனர்.