சென்னை:பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் சார்பில் தமிழ்நாட்டில் நோய் பரவல் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதனை மருத்துவ இதழ்களில் வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள இளம் பருவத்தினருக்கு இரத்த சோகை நோய் தொற்று பாதிப்பு குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு, அதனையும் வெளியிட்டுள்ளனர். உலகளாவிய பொது சுகாதாரத்துறையின் கவலையாக இரத்த சோகை நோய் இருக்கிறது.
வளரிளம் பருவத்தினரிடையே இரத்த சோகை பாதிப்பு:குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், இளம் பருவத்தினரின் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்த ஆய்வு இரத்த சோகையின் பரவல் மற்றும் தீவிரத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இளம் பருவத்தினரிடையே இரத்த சோகையின் பாதிப்புகளை கண்டறிந்து சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
41% இளைஞர்களும் இரத்த சோகை: நாடு, மக்கள்தொகை மற்றும் சமூக-பொருளாதார மாறுபாடுகளில் இரத்த சோகை பரவலை ஆய்வு செய்து, பரிந்துரைகளை வழங்க ஆய்வு செய்யப்பட்டன. ரத்த சோகை கண்டறியும் முகாம்கள், 2 ஆயிரத்து 127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் (Primary Health Centre) மற்றும் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து தரவுகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 56 சதவீதம் இளம்பெண்களும், 41 சதவீதம் இளைஞர்களும் இரத்த சோகை நோயுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் இரத்த சோகை பாதிப்பு: கடுமையான இரத்த சோகையால் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் நிலைமைகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் இளம் பருவத்தினரிடையே இரத்த சோகை நோயின் பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம், கரூர், இராமநாதபுரம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இரத்த சோகை நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோய் பாதிப்பை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். இரத்த சோகை நோய் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “தமிழ்நாட்டில் ரத்த சோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு வளரிளம் பருவத்தினரை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
இரத்த சோகை கண்டறியும் முகாம்:10 வயது முதல் 19 வயதுடைய வளரிளம் பருவத்தினர் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்றால், அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக இருக்கும். அதனால் அவர்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளும் ஆரோக்கியமாக உடல் திடகாத்திரத்துடன் இருக்கும். எனவே வளரிளம் பருவத்தினருக்கு இரத்த சோகை கண்டறியும் செயல்களில் ஈடுப்பட்டு கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
57% பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை:இதுவரை 8.7 லட்சம் பெண் குழந்தைகளுக்கும், 6.83 லட்சம் ஆண் குழந்தைகளுக்கும் இரத்த சோகை பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்ததில் 57 சதவீதம் பெண் குழந்தைகளுக்கும், 43 சதவீதம் ஆண் குழந்தைகளுக்கும் இரத்த சோகை பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிப்பு நடவடிக்கைகள்: அவர்களில் 2 சதவீதம் அதாவது 11 ஆயிரத்து 253 பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை பாதிப்பு அதிகளவில் உள்ளதால், அவர்களை தொடர்ந்து கண்காணித்து மருந்து மாத்திரைகள், ஊசி, தேவைப்பட்டால் ரத்தம் செலுத்துதல் போன்றவை அளிக்கப்படுகிறது. அதே போல் ஒரு சதவிகித ஆண்களுக்கு தீவிரமான ரத்தசோகை பாதிப்பு இருக்கிறது. அதனையும் சரி செய்யும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
இரத்த சோகை வராமல் பாதுகாப்பதற்காக சுகாதாரக்கல்வியும், வாரத்தில் ஒரு நாள் அயன் போலிக் அமில மாத்திரை வழங்கப்படுகிறது. நடமாடும் மருத்துவக் குழுவினால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தேவைப்படும் போது ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS - Integrated Child Development Services) திட்டத்தோடும் இணைந்து செயல்படுகிறோம்.