சென்னை:உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் மரணங்களில் 74 சதவீதம் Noncommunicable diseases எனப்படும் தொற்றா நோய்களால் நிகழ்கின்றன என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் தரவு. "ஒரு மனிதன் தினமும் 30 நிமிடம் நடந்தால் தொற்றா நோய்கள் என கூறப்படும் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் குறையும்" என்கிறார் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வவிநாயகம்.
உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் 150-300 நிமிடங்கள், மிதமான முதல் தீவிரமான உடற்பயிற்சி அல்லது 75-150 நிமிடம் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உடற்பயிற்சி உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பான பிரச்னைகளில் 27 சதவீதமும், இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் 30 சதவீதம் குறைக்க உதவியாக இருக்கும்.
தமிழ்நாடு அரசில் மருத்துவத் துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன், மாரத்தான் பந்தயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருக்கும் நிலையில், உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 64 வயதான மா.சுப்பிரமணியன் இது வரையிலும் 150 மாரத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று ஓடியுள்ளார். India Book of records மற்றும் Asia Book of recordsல் இவரது சாதனைகள் இடம் பெற்றுள்ளன.
தனது ஃப்ட்னஸ் குறித்து பேசிய அமைச்சர், "2004ஆம் ஆண்டு மோசமான கார் விபத்தில் சிக்கி காலிலும், தலையிலும் காயமடைந்தேன். காலில் 6 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மறுநாள் பத்திரிகைகளில் மா.சுப்பிரமணியன் கவலைக்கிடம் என செய்தி வெளியிட்டார்கள். இதோடு 25 ஆண்டு காலமாக சர்க்கரை நோயும் இருக்கும் நான், இன்று எழுந்து நடந்ததோடு மட்டுமின்றி, ஓட்டப் பந்தயங்களிலும் என்னால் கலந்து கொள்ள முடிகிறது" என கூறினார்.
இளைஞர்களுக்கு உடற்பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படுத்தும் அமைச்சரின் முன்னெடுப்புடன் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் Walk way எனப்படும் நடைப்பயிற்சி பாதைகள் "நடப்போம் நலம்பெறுவோம்" திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. இதில், முதன்மையானதாக பெசன்ட் நகரில் இருக்கும் 8 கிலோ மீட்டர் நீள பாதை உள்ளது. இந்த சாலையில் காலை 5 மணி முதல் 8 மணி வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படும்.
தனித்துவமான இந்த பாதையில் அண்மையில் சென்னை வந்தஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மா.சுப்பிரமணியனுடன் இணைந்து ஓட்டப் பயிற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் டோக்கியோ நகரில் இருக்கும் 8 கிலோ மீட்டர் நீள நடைப்பயிற்சி பாதை தன்னை ஈர்த்ததால், அது போன்ற ஒரு மாதிரியை சென்னையில் உருவாக்க முடிந்ததாகக் கூறும் மா.சுப்பிரமணியன், உலகிலேயே டோக்கியோவுக்குப் பின் சென்னையில் தான் இத்தகைய நடைப்பயிற்சிப் பாதை உள்ளது என கூறுகிறார்.