சென்னை: பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் கேரளாவில் ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், தனக்கு கவனக்குறைவு, அதிக செயல்பாடு குறைபாடு கோளாறு Attention-deficit/hyperactivity disorder (ADHD) இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த பிரச்னை சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்படும், ஆனால் 41 வயதான எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முடியுமா என டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, ADHD என்ற பிரச்னை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. உலக அளவில் பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தீர்வு என்ன என்பது குறித்து எஸ்.ஆர்.எம் (SRM) குளோபல் மருத்துவமனையின் தலைமை உளவியல் மருத்துவர் அருள் சரவணனை ஈடிவி பாரத் ஊடகம் அனுகியது.
அப்போது அவர் பேசியதாவது, “சமீபத்தில் பல பிரபலங்கள் அவர்களுக்கு உள்ள மனநல பிரச்னைகளை வெளிப்படையாக கூறுகின்றனர். அதில் ஒன்று ADHD, இந்த குறைபாடு உள்ளவர்கள் எந்த செயல் செய்தாலும், அதிவேகமாக செயல்படுவார்கள். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள், ஒரு இடத்தில் குறைந்த நேரம் அமைதியாக அமர்ந்து ஒரு செயலில் ஈடுபட முடியாமல் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும், ஆண் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு இருப்பதால், அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்கின்றனர்.