சென்னை: உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்-க்கு செல்லும் இளைஞர்கள், மத்தியில் இன்று மிகவும் பிரபலமான வார்த்தை புரோட்டீன் பவுடர் தான். அன்றாட உணவில் இருக்கும் புரோட்டீன் பற்றாக்குறையை சரி செய்யவும், விரைவான தசை வளர்ச்சிக்கும், இளைஞர்கள் நாடுவது Whey Protein எனப்படும் புரோட்டீன் பவுடர்கள் தான்.
புரோட்டீன் பவுடர் என்பது என்ன?:நாம் அன்றாடம் சாப்பிடும் அத்தனை உணவுகளிலும் புரோட்டீன் உள்ளது. சில உணவுகளில் புரோட்டீனின் அளவு கூடுதலாக இருக்கும் , இவை உடலின் தசை வளர்ச்சிக்கு தேவையான சக்தியை அளிக்கின்றன. முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள் போன்றவை புரோட்டீன் அதிகம் உள்ளவையாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் புரோட்டீனைப் போன்றே இதே உணவு வகைகளில் மாவுச்சத்து, கொழுப்பு உள்ளிட்டவையும் இருக்கும்.
ஆனால் புரோட்டீன் பவுடர்கள் பாலில் இருந்து புரோட்டீனை மட்டும் பிரித்து எடுத்து உருவாக்கப்படுகின்றன. இதனால் கொழுப்பு, மாவுச்சத்து போன்றவை சேராமல் புரதம் மட்டும் எடுத்துக் கொள்ள முடியும். இந்த புரோட்டீன் பவுடர் அனைவருக்கும் தேவையா என்பது ஒருபுறம் இருக்க, இந்திய சந்தைகளில் விற்கப்படும் புரோட்டீன் பவுடர்களின் ஆபத்து குறித்து எச்சரிக்கிறது ஒரு ஆய்வறிக்கை.
புரோட்டீன் பவுடர்களில் நச்சு:இந்திய சந்தைகளில் விற்கப்படும் புரோட்டின் பவுடர்களின் தரம் மற்றும் பாதுகாப்புக் காரணிகள் உள்ளடக்கிய பல்வேறு ஆய்வுகள் குறித்து journal Medicine என்ற இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரை அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறிப்பாக பாடி பில்டர்ஸ் மற்றும் ஜிம் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சந்தைகளில் விற்கப்படும் பிரபலமான புரோட்டின் பவுடர்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில் 36 வகையான புரத சத்தின் உள்ளடக்கம் உள்ளதா? என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் சுமார் 70% புரோட்டின் பவுடர்களில் சரியான அளவு புரதம் இல்லை எனவும் இன்னும் பலவற்றில் பாதிக்கும் குறைவாகவே புரத சத்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், சுமார் 14 % புரோட்டின் பவுடர் பிராண்டுகளில் அபாயகரமான பூஞ்சைக் கொல்லிகள் ( fungal aflatoxins) உள்ளதாகவும், அதேபோல, சுமார் 8% விழுக்காடு பிராண்டுகளில் பூச்சிக்கொல்லிகளின் மாதிரிகள் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அளித்துள்ள ஐ.எம்.ஏ.ஆர்.சி குழு, இதுபோன்ற அபாயகரமான புரோட்டின் பவுடர்களில் லெட், காட்மியம், மெர்க்குரி போன்ற மூலக்கூறுகள் இருப்பதாகவும், இந்த உட்கொள்ளும் நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
சுவையூட்டிகளால் ஆபத்து!: அது மட்டும் இன்றி சுவையூட்டிகளாக (Flavors) இதில் இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்டுள்ளதால், உடலில் இன்சுலின் ஹார்மோனின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு காலப்போக்கில் சர்க்கரை நோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெர்பல் மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளடக்கியதாக விற்கப்படும் புரோட்டீன் பவுடர்களில் இவ்வகை நச்சுத்தன்மை அதிகம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையான புரோட்டின் பவுடர்கள் இந்திய சந்தைகளில் சுமார் ரூ. 33,028.5 கோடி சந்தை மதிப்பை கொண்டுள்ளதாகவும், ஐ.எம்.ஏ.ஆர்.சி குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஏற்கெனவே கேள்வி எழுப்பியிருந்தன. இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் ஆய்வு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதாவது புரோட்டின் பவுடர்கள் மற்றும் உணவு சப்ளிமெண்ட்ஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களை விற்கும் நிறுவனங்களுக்கு எதிராக, 38,053 சிவில் மற்றும் 4,817 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்று நினைத்தால் நாளை பாடி பில்டரா?: இது குறித்து பொதுநல மருத்துவர் சாந்த குமாரிடம் ஈடிவி பாரத் செய்தி நிறுவனம் கேள்விகளை முன்வைத்தது. அப்போது பேசிய அவர், உடற்கட்டமைப்பை அழகாக வைத்துக்கொள்ள விரும்பும் இளைஞர்களை குறிவைத்தே இதுபோன்ற அபாயகரமான மோசடி சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். கண்களுக்கு கவர்ச்சியூட்டும் விளம்பரங்கள், கட்டான உடலமைப்பு உள்ளிட்டவை மீது இன்றைய தலைமுறையினருக்கு அதீத ஆர்வம் உள்ளதாகவும், அதை ஆரோக்கியமான உணவு மற்றும் உடற் பயிற்சி மூலம் மேம்படுத்தாமல், குறுகிய காலத்தில் பாடி பில்டர் ஆகிவிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
சாந்த குமார், பொதுநல மருத்துவர் இவர்களை குறிவைத்தே இதுபோன்ற அபாயகரமான சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த அவர் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதை தவிர இந்தியாவில் வேறு வழி இல்லை எனவும் கூறினார். ஜிம், வர்க் அவுட், மசில் பில்டிங் போன்றவைகளை ஊக்குவிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட புரோட்டின் பவுடர்கள் இந்திய சந்தைகளில் விற்கப்படும் நிலையில் அதற்கான தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து எவ்வித உத்திரவாதமும் இல்லை எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த புரோட்டின் பவுடர்களை உட்கொள்ளும் நபர்களின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழக்கும் அளவுக்கு காலப்போக்கில் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
நீரிழிவு நோயாளிகள் குழம்ப வேண்டாம்:அதேநேரம், நீரிழிவு நோயாளிகள் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் விற்கப்படும் தரமான பிராண்டுகளில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அங்கீகரிக்கப்பட்ட புரோட்டீன் ஊட்டச்சத்து பொருட்களை சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை.
அனைவருக்கும் தேவையா புரோட்டீன் பவுடர்?: இதே போல விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் ஊட்டச்சத்து ஆலோசகரான ரயான் பெர்னாண்டோ செயற்கை புரோட்டீன் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இன்ஸ்டா பக்கத்தில் இது பற்றிய பகிர்ந்த அவர், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் விளையாட்டை தொழிலாகக் கொண்டவர்கள் மட்டுமே புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்தலாம் என கூறுகிறார். அதிகப்படியான புரோட்டீன் பவுடர் பயன்பாடு மூளையை பாதிக்கும் அபாயத்தில் தள்ளும் எனவும் எச்சரிக்கிறார்.
இதே போன்று பிரபல தொழிலதிபரும் ஸ்நாப்டீல் (Snapdeal) இணையதள நிறுவனருமான குனால் பால் (KUmal Bahl) புரோட்டீன் பவுடர்களால் தனக்கு நேர்ந்த விரும்பத் தகாத நிகழ்வுகள் குறித்து விவரித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு புரோட்டீன் பவுடர் எடுத்துக் கொள்ளுமாறு தனக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும். ஆனால் இதனை எடுத்ததுமே மிகவும் தீவிரமான உடல்நல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் கூறுகிறார். இதனால் புரோட்டீன் சாப்பிடுவதை நிறுத்தியதும் மெதுவாக உடல்நலம் சரியானதாக கூறும் அவர், கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:அந்த விஷயத்தில் இந்தியர்கள் எப்படி? உலக அளவில் வெளியான ஆய்வின் முடிவுகள்..! - Indians Are The Least Promiscuous