தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / health

அடிக்கடி வலி நிவாரணி மாத்திரை உட்கொள்பவரா நீங்கள்? இதைக் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.! - Pain Killers are they safe or not - PAIN KILLERS ARE THEY SAFE OR NOT

வலி மருந்துகள் மற்றும் மாத்திரைகள் பாதுகாப்பானதா? தலைவலி உடல்வலி மூட்டு வலி முதுகு வலி போன்றவற்றுக்காக எடுக்கும் போது அவை உண்டாக்கும் பக்கவிளைவுகள், பாதிப்புகள் என்னென்ன? இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வலி நிவாரணி மாத்திரை: கோப்புப்படம்
வலி நிவாரணி மாத்திரை: கோப்புப்படம் (Credit: Getty Image)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 10:39 PM IST

சென்னை: தலைவலி, கை, கால் வலி என எது வந்தாலும் மருந்துக்கடைக்குச் சென்று 'ஒரு வலி மாத்திரை குடுப்பா' எனக் கேட்டு மிட்டாய்போல் வாங்கி வாயில் போட்டு தண்ணீர் குடித்துக்கொள்ளும் நபர்கள் ஏராளம் உண்டு. இந்த வலி மாத்திரைகளை நீங்கள் அடிக்கடி உட்கொள்வதால் உங்கள் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சூழல் உருவாகும் நிலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து பொதுநல மருத்துவர் சாந்தகுமாரிடம் கேட்டபோது, வலி நிவாரணிகள் மருத்துவர் ஆலோசனை இன்றி அடிக்கடி உட்கொள்வது மிகவும் அபத்தமான ஒன்று எனக் குறிப்பிட்டார்.

வலி நிவாரணி மாத்திரைகள் என்றால் என்ன? உலகம் முழுவதும் இரண்டு வகையான வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drugs - NSAIDs) மற்றொன்று பாராசெட்டாமோள் (paracetamol) ஆகியவை ஆகும். இவற்றிற்குள் இருந்து பல்வேறு வகையான மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. நிறுவனத்தின் பெயர்களில் மட்டுமே மாற்றம் வரும்.

வலி நிவாரணிகளை மக்கள் நாடுவதற்கான காரணம் என்ன?30 வயது கடந்துவிட்டாலே கை கால் வலி, முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி என பல்வேறு வலி தொடர்பான பிரச்சினைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள். இந்த வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெற வேண்டும் என நினைக்கும் அவர்கள் மருந்துக் கடைகளுக்குச் சென்று வலி மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அந்த வலிக்கான அடிப்படை காரணம் என்ன எனக் கண்டறியத் தவறும் மக்கள், நீண்ட நாள் கழித்து வேறு ஏதேனும் நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க மருந்துக் கடைகளில் வலி நிவாரணி மாத்திரைகள் எவ்வித மருத்துவர் பரிந்துரையும் இன்றி எளிமையாகக் கிடைப்பதால் மக்கள் அதை அடிக்கடி வாங்கி பயன்பெறவே நினைக்கிறார்கள். இது உடலில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர் சாந்த குமார் கூறியுள்ளார்.

வலி நிவாரணி மருந்து மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?வலி மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் சாதாரண தோல் ஒவ்வாமை முதல் மாரடைப்பு வரை வருவதற்கான வாய்ப்புகள் உள்தாக மருத்துவர் சாந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

  • வயிற்று வலி
  • அல்சர்
  • மற்றும் தீவிர அல்சர்
  • குடல் பகுதியில் ரத்தக் கசிவு
  • மலம் கழிக்கும்போது ரத்தம் கசிவது
  • ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு
  • இருதய ரத்தக் குழாயில் ரத்த அடைப்பு ஏற்படலாம்
  • ஆஸ்துமா நோயாளிகளுக்கு மூச்சுக் குழல் சுருக்கம் ஏற்படலாம்
  • சிறுநீரக பாதிப்பு ஏற்படும்
  • தற்காலிக சிறுநீரக செயலிழப்பு மற்றும் நிரந்தர செயலிழப்புக்கு வழிவகுக்கும்
  • மூளை நரம்பு தொடர்பான பாதிப்புகள் வர வாய்ப்பு

இந்த பக்கவிளைவுகள் யார் யாருக்கு வரும்:வயது வித்தியாசம் இன்றி அனைவருக்கும் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், 55 வயது தாண்டியவர்கள், நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்தம் அழுத்தம் உள்ளவர், இருதய நோயாளிகள் உள்ளிட்டோருக்குப் பக்கவிளைவுகள் வர அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

வலி மாத்திரைக்குப் பதில் ஊசி போட்டுக்கொள்ளலாமா?சிலர் வலி நிவாரணி மாத்திரைகளைப் போட்டால்தான் பக்கவிளைவுகள் வரும், ஊசி போட்டால் எவ்வித ஆபத்தும் இல்லை என நினைத்துக்கொண்டு அடிக்கடி மருத்துவமனைகள் சென்று ஊசி போட்டுக்கொள்ளும் வழக்கத்தை வைத்துள்ளனர். இது முற்றிலும் தவறான கண்ணோட்டம். மாத்திரை மட்டும் அல்ல ஊசி போட்டாலும் அதன் சரிசமமான பக்க விளைவுகளைத் தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என மருத்துவர் சாந்தகுமார் கூறியுள்ளார்.

வலி மருந்து பாதிப்பில் இருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யலாம்?

  • மருத்துவர் பரிந்துரை இன்றி வலி மாத்திரைகளை வாங்கி அடிக்கடி பயன்படுத்தக்கூடாது
  • மருத்துவர் எப்போதோ எழுதிக்கொடுத்த பரிந்துரை சீட்டை வைத்துக்கொண்டு அதே மருந்துகளை மீண்டும் மீண்டும் வாங்கி பயன்படுத்தக்கூடாது
  • வலிக்கு வலி நிவாரணி மருந்து மட்டும்தான் தீர்வு என நினைக்காமல், உணவு, உடற்பயிற்சி, யோகா, நல்ல உறக்கம், சரியான வாழ்க்கை நடைமுறை உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டும்
  • வலி நிவாரணி மருந்துகளுக்கு மாற்றாக வலி நிவாரணி ஆயின்மென்ட், ஜெல், ஸ்ப்ரே உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம்
  • முடிந்தவரை குடும்ப மருத்துவர் என்ற அடிப்படையில் வழக்கமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளைப் பெற்றுக்கொள்வது சிறந்தது.

இதையும் படிங்க:சாராயம் Vs எரிசாராயம்: மெத்தனாலினால் இவ்வளவு பிரச்சினைகளா?.. உஷார் மக்களே! - effects of methanol mixed Liquor

ABOUT THE AUTHOR

...view details