திருச்சி:கோடைகாலமான தற்போது தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சூரிய வெளிச்சம், தூசு, மாசு ஆகியவற்றை மனிதர்கள் கோடை காலத்தில் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் கண் தொடர்பான பல்வேறு பாதிப்புகள் இந்த காலகட்டத்தில் உருவாகும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக உலர்ந்த கண்கள், புறஊதா கதிர்வீச்சு பாதிப்பு மற்றும் கண் காயங்கள் ஆகியவை இக்காலத்தில் அதிக அளவில் ஏற்படுகிற பாதிப்புகளாக இருக்கின்றன. இதுபோன்ற நேரங்களில் சூரியனின் கதிர்வீச்சு ஒவ்வாமைகள் மற்றும் காயங்களில் இருந்து கண்களை பாதுகாப்பது மிக முக்கியமானது என திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள வைஷாலி மருத்துவமனையில் இயங்கிவரும் துருவ் கண் மருத்துவமனை மருத்துவர்வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவர் வைஷ்ணவி கூறுகையில், "தற்போது கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. முற்காலத்தில் இருந்ததைவிட தற்போது சூரியனில் இருந்துவரும் புறஊதா கதிர்களின் வீச்சும் அதிகமாக உள்ளது. இதனால் நமது கண்ணிற்கு இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
முதலாவதாக, அதிகமான புறஊதா கதிர்வீச்சினாலும், சூரிய ஒளியை அதிகமாக பார்ப்பதாலும் கண்ணில் புரை ஏற்படும். இரண்டாவதாக, இந்த கதிர்வீச்சினால் கண் விழித்திரையில் உள்ள அணுக்கள் கொஞ்சம், கொஞ்சமாக நசுங்கி பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு முற்காலத்தில் அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள், கடலில் மீன் பிடிப்பவர்கள், வயல் வெளியில் வேலை செய்பவர்களுக்கு ஏற்பட்டது. தற்போது கதிர்வீச்சு அதிகமாக இருப்பதால் சாதாரண மனிதர்களுக்கும் ஏற்படுகின்றது.
கண்புரை வராமல் பாதுகாக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறை:
- பகல் நேரத்தில் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
- கூலிங் கிளாஸ் (Cooling Glass) அணிய வேண்டும்.
- சாதாரண கருப்பு கண்ணாடி அணியாமல், புறஊதா கதிர்வீச்சுகளை குறைக்கக்கூடிய வகையில் உள்ள கண்ணாடிகளை அணிய வேண்டும்.
- வெயில் நேரடியாக கண்ணில்படாமல் இருக்க தொப்பி அணிந்து கொள்வது நல்லது.