சென்னை:தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து, நகரங்கள் மாநகரங்கள் ஆனாலும், கட்டுக்கதைகள் என்னவோ மக்களை விட்டு விலகுவதில்லை. அதிலும் கருவுறுதலுக்கு மக்கள் கூறும் கட்டுக்கதைகள் அதிகம் தான். உலகளவில் கருவுறாமையால் மில்லியன் கணக்கான தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவுறாமை குறித்த தவறான தகவல்களால் பெண்கள் அடிக்கடி தங்களைத் தாக்கிக் கொள்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருவுறாமை ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கட்டுக்கதைகளை நம்பி மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஒரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், குறிப்பிட்ட சில உணவுகளை உண்பது மலட்டுத்தன்மையை தடுக்கும் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதாகும்.
இதை நம்பும் பெண்கள் அல்லது ஆண்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் குறிப்பிட்ட உணவு முறைகளை கடைபிடிக்க தனக்குத்தானே அழுத்தம் கொடுக்கிறார்கள். அவ்வாறாக கூறப்பட்டுள்ள சில கட்டுக்கதைகளையும் உண்மைகளை இத்தொகுப்பில் காணலாம்.
கட்டுக்கதை 1 -அன்னாசி பழத்தின் நடுப்பகுதியை உட்கொள்வது உள்வைப்பிற்கு (கருவுற்ற முட்டை கருப்பைச் சுவற்றுடன் இணைக்கப்படும் நிகழ்வு) உதவுகிறது.
உண்மை:அண்ட விடுப்பின் பின்னர் அன்னாசிப்பழத்தின் நடுப்பகுதியை உட்கொள்வது உள்வைப்பிற்கு உதவுகிறது என்று சிலர் கூறுகின்றனர். அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமைலைன், இரத்தத்தை மெல்லியதாகச் செயல்படும் நொதிகளின் தொகுப்பு. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.