சென்னை:மாம்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு சந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-ல் இருந்து 300 டன் வரை மாம்பழங்கள் வந்திறங்குகின்றன. அதிலும் குறிப்பாக, அல்ஃபோன்சா, செந்தூரம், பங்கனபள்ளி, ஹிமாம் பசந்த, காளபாடி, கிளி மூக்கு, நடு சோலை, குதாதாத் உள்ளிட்ட சுமார் 15 வகையான மாம்பழங்கள் பெரும் அளவு வருகின்றன.
இந்த மாம்பழங்கள் அனைத்தும் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? இல்லை செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகிறதா? இதை வாங்கி உண்ணலாமா? கூடாதா? குழந்தைகளுக்குத் தைரியமாகக் கொடுக்கலாமா? வேண்டாமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுகின்றது. அனைத்திலும் வியாபார நோக்கம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், லாபத்திற்காக மாம்பழ வியாபாரிகள் சிலர் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கின்றனர்.
குறிப்பாக, எத்தலின் (Ethylene) , ரிபெனர் (ripener) போன்ற இரசாயனங்கள் பவுடர் வடிவில் கிடைப்பதாகவும் அதேபோல, பழங்களைப் பழுக்க வைக்க மார்க்கெட்டில் ஸ்ப்ரேயர்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது மட்டும் இன்றி கால்சியம் கார்பைடு கற்களை வைத்தும் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது எனக்கூறப்படுகிறது.
செயற்கையாகப் பழுக்க வைத்த மாம்பழங்களை எப்படிக் கண்டறிவது.?
- பார்ப்பதற்கு பளபளவென கண்களைக் கவரும்
- அனைத்துப் பழங்களும் ஒரே அளவில் பழுத்திருக்கும்
- அனைத்தும் ஒரே மாதிரியான நிறத்தில் இருக்கும்
- முழுமையாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்
- மாம்பழத்தில் மனம் பெரிதாக இருக்காது