மதுரை: "குழந்தைகள் விளையாடுவதற்கு, அவர்களது வாயின் அளவை விட பெரிய பொருட்களை கொடுக்க வேண்டும்" என 8 மாத பெண் குழந்தையின் மூச்சுக் குழாயில் இருந்த எல்இடி லைட்டை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியப்பின் அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இன்பராஜ் என்பவரின் 8 மாத பெண் குழந்தையை இருமல், மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்ந்த அக்.28ம் தேதி அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்ததாலும் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது நுரையீரலில் சிறிய கொண்டை ஊசி போன்ற பொருள் சிக்கியிருப்பதாக தென்பட்டதாலும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் 1ஆம் தேதி அனுமதித்துள்ளனர்.
எல்இடி லைட்யை விழுங்கிய குழந்தை: இந்நிலையில், குழந்தையின் இடது நுரையீரலில் மூச்சுக் குழாயில் இரும்பு ஊசி போன்ற பொருள் சிக்கி உள்ளதாக ஸ்கேன் பரிசோதனையில் மருத்துவர்களால் கண்டறியப்பட்டது. இந்நிலையில், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையிலும், நுரையீரல் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும் இரும்பினாலான அந்தப்பொருளை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிறிய அளவிலான பிராங்கோஸ்கோப்பி எனப்படும் நுரையீரல் அகநோக்கி சிகிச்சையின் மூலம் பாதுகாப்பாக குழந்தையின் இடது பக்க நுரையீரலில் சிக்கி இருந்த அந்தப்பொருள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் (Credit - ETVBharat Tamil Nadu) குறிப்பிட்ட அப்பொருள் குழந்தைகள் விளையாடும் ரிமோட் கண்ட்ரோல் காரின் எல்இடி லைட் என உறுதி செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்கு பின்னர் குழந்தை பூரண நலம் பெற்று திங்கட்கிழமை அன்று நலமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விளையாட்டு பொருளில் கவனம்:இந்த சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக செயல்படுத்திய மருத்துவக் குழுவை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அருள் சுந்தரேஷ் குமார் அவர்கள் வெகுவாக பாராட்டினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில், "சிறு குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்களை வாயில் வைத்து விளையாடும் போது அவற்றை வயிற்றில் விழுங்கவோ அல்லது நுரையீரல் மூச்சுக்குழாயில் சிக்கிக் கொள்ளவோ வாய்ப்பு உள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகள் விழுங்க வாய்ப்புள்ள சிறு பொருள்களை விளையாட அனுமதிக்க கூடாது. மேலும் குழந்தைகளுக்கு இருமல் மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்து இருக்கும் பட்சத்தில் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் சிறு பொருட்களை விழுங்கி இருக்கலாம் என சந்தேகப்பட்டால் உடனே மருத்துவமனை அணுகி மருத்துவரிடம் தெரிவித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதால் உயிருக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்