முந்திரி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? வீட்டில் பொங்கல், பாயாசம் என விஷேசமாக செய்யும் பொழுது, சமையலறைக்கு சென்று பேப்பர் பொட்டலத்தில் இருக்கும் முந்திரியை சாப்பிட்ட ஞாபகம் நினைவிருக்கா? உணவில் முந்திரி சேர்த்தால் தனி சுவை தான். அதுவும் நெய்யில் வறுத்தது என்றால்? பக்கதில் உள்ளவர்களிடம் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவோம். முந்திரியின் சுவை பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தாலும் அதன் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
இதய நோய்யை தடுக்கிறது: முந்திரியில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், இதய செயல்பாட்டை மேம்படுத்த தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முந்திரி பருப்பில் நிறைந்துள்ளது. அமெரிக்க மக்கள், தங்களது உணவில் முந்திரியை சேர்த்துக்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைவதாக NCBI நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
புற்றுநோயை தடுக்கிறது:முந்திரி பருப்பு உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது. முந்திரியில் உள்ள புரோந்தோசயனிடின்கள் (Proanthocyanidins) எனும் ஒரு வகையான ஃபிளாவனால் (flavonol) உடலில், புற்றநோய் கட்டியை வளர விடாமல் தடுக்கிறது.
வெயிட் லாஸ்: உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை முந்திரி பருப்பு குறைக்கிறது. முந்திரி பருப்பு உட்கொள்வதால், அதிக ஆற்றல் கிடைத்து பசியை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். எடையை கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் தினமும் 3 முதல் 4 முந்திரி பருப்புகளை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
சருமம் பராமரிப்பு: முந்திரியில் நிறைந்திருக்கும் தாமிரம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் சருமத்தை பொலிவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் வயதான தோற்றத்தை தடுக்கிறது மற்றும் தாமிரம் மற்ற நொதிகளுடன் சேர்ந்து கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.