சென்னை: உணவுப் பழக்க வழக்கம் மற்றும் வாழ்வியல் நடைமுறையில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பலருக்குச் சிறுநீரகத்தில் கல் உருவாவது சாதாரணமாகி வருகிறது. இதனால் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
உங்கள் சிறுநீரகத்தில் கல் இருந்தால் அதன் அறிகுறி எப்படி இருக்கும்?
- இடுப்பின் பின் பகுதியில் அதீத கடைச்சல் மற்றும் வலி
- சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர் பாதையில் கடுகடுப்பு
- சிறுநீர் வெளியேறும்போது இரத்தம் கலந்து வருதல்
- சிலருக்குக் காய்ச்சல் ஏற்படலாம்
சிறுநீரகத்தில் கல் எப்படி? எதனால் உருவாகிறது?:சிறுநீரகத்தில் கல் உருவாக முதல் முக்கியக் காரணம் உணவுப் பழக்கம்தான். நாம் உண்ணும் உணவில் அதீத உப்பு சத்து இருக்கும் பட்சத்தில் கல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. மேலும், போதுமான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது, சிறுநீர் கழிக்காமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரகம் மற்றும் அதன் பாதையில் கல் உருவாகிறது. அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புக்களால் உருவாகும் இந்த கல், அதீத வலி தருவது மட்டும் இன்றி, அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்லும் அளவுக்கு அதிதீவிரமானது.
சிறுநீரகத்தில் கல் வராமல் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும்?:சிறுநீர் கல் உருவாகாமல் இருக்கத் தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் முதல் அறிவுறுத்தல். மேலும், ஒருவர் நாள் ஒன்றுக்குத் தனது ஒட்டு மொத்த உணவில் சுமார் 5 கிராம் வரை மட்டுமே உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உப்பு என்றால் நாம் உணவு சமைக்கும்போது சேர்க்கும் உப்பு மட்டும் அல்ல, நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உப்பு சத்து இருக்கின்றன. உடல் இவைகளையும் உப்பின் தன்மையாகவே ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் இறைச்சியைக் குறைத்துக்கொள்வது நல்லது.
அதில் அதீத புரதச்சத்தும், உப்பின் தன்மையும் உள்ள நிலையில் அதற்கு மாற்றாக பயிறு, பருப்பு உள்ளிட்ட தானிய வகைகளை உட்கொண்டால் புரதச்சத்தும் கிடைக்கும் உப்பின் அளவும் கட்டுக்குள் இருக்கும். மேலும், சிறுநீர் கல் அடிக்கடி உருவாகிறது என்ற நிலையில் உள்ளவர்கள், கீரை, சாக்லெட் மற்றும் நட்ஸ் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என்பதும் மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.
சிறுநீரகத்தில் கல் வந்த பிறகு எந்த உணவுகளை உட்கொண்டால் சிறந்தது?:சிறுநீர் மற்றும் சிறுநீர் பாதையில் கல் உருவாகி சிகிச்சை எடுப்பவர்களும், சரி அது வரவே கூடாது என நினைப்பவர்களும் சரி உங்கள் உணவில் வாழை மரத்தின் நலனை நாடுங்கள் என்கிறது ஆயுர்வேத மருத்துவம். வாழைத் தண்டு மற்றும் வாழைத் தண்டு தண்ணீர், சிறுநீர்கல் பிரச்சனைக்குச் சிறந்ததது.