ஐதராபாத்:எண்டோஸ்கோபியின் அதி நவீன தொழில்நுட்பம் மூலம் கண் இமை வழியாக மூளையில் உள்ள கட்டியை அகற்றி புது சாதனையை படைத்துள்ளனர், ஐதராபாத் கச்சிபௌலியில் உள்ள ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டாலஜி (AIG) மருத்துவமனையின் மருத்துவர்கள்.
கடந்த ஆறு மாதங்களாக மங்கலான பார்வை மற்றும் வலது கண்ணில் வலியை அனுபவித்து வந்த 54 வயது பெண் ஒருவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கண் பார்வை குறைபாடு மற்றும் வலியால் அவதிப்பட்டு வந்த பெண் பல சிகிச்சைகளை மேற்கொண்டு பலனளிக்காததால் ஏஐஜி மருத்துவமனையை நாடியுள்ளார்.
அங்கு, அப்பெண்ணிற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். அபிராசந்திர கபிதா, நரம்பியல் அறுவை சிகிச்சை இயக்குனர் டாக்டர். சுபோத்ராஜு மற்றும் கண் மருத்துவர்கள் குழு முழுமையான பரிசோதனையை மேற்கொண்டனர். பரிசோதனையில், அப்பெண்ணின் மூளையில் ஸ்பினோ ஆர்பிடல் கேவர்னஸ் மெனிங்கியோமா (Spheno Orbital Cavernous Meningioma - SOM) இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த கட்டியானது அப்பெண்ணின் மண்டை ஓடு மற்றும் கண்ணின் பின்புறத்தில் உள்ள சந்திப்பு பகுதியில் சுமார் 2 செ.மீ அளவில் இருந்துள்ளது. இந்த மாதிரியான பதிவுகளோடு வரும் நோயாளிகளுக்கு மண்டை ஓட்டில் கீறல் போடப்பட்டு கட்டிகள் அகற்றப்படுவது வழக்கம்.