திருப்பதி லட்டுவை செய்ய 'இந்த' பொருள் போதும்..சுவையில் மெய்மறக்க இப்போதே செய்து பாருங்க..! - TIRUPATI LADDU RECIPE - TIRUPATI LADDU RECIPE
TIRUPATI LADDU RECIPE IN TAMIL: திருப்பதி லட்டுவை வீட்டில் செய்து பார்க்க ஆசையா? என்ன செய்தாலும் கோயிலில் கொடுப்பது போல மணமும் சுவையும் வரவில்லையா? வீட்டிலேயே, கோயிலில் கொடுக்கும் சுவையில் எப்படி திருப்பதி லட்டுவை செய்யலாம் என்பதை பார்க்கலாம்..
ஹைதராபாத்:லட்டு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது..அதுவும் திருப்பதி லட்டு என்றால்..சொல்லவா வேண்டும்? திருப்பதிக்கு சென்றால் முதலில் ஏழுமலையானை பார்த்து தரிசனம் செய்ததும் அடுத்ததாக அனைவரும் செய்யும் வேலை லட்டுவை வாங்க ஓடுவது தான். காரணம், லட்டுவின் மணமே நம்மை இழுத்து சென்று விடுகிறது.
பக்கத்து வீட்டில் யாராவது திருப்பதிக்கு சென்று வந்தால் போதும், அவர்கள் கொடுக்கும் லட்டுவை சாப்பிடுவதற்கு வீட்டில் சண்டையே வந்து விடும். இப்படி, யாராவது திருப்பதி போக மாட்டார்களா? லட்டு வாங்கிட்டு வர மாட்டாங்களா? என இனியும் காத்து கிடக்க தேவையில்லை..வீட்டிலேயே சுலபமாக மனமான, சுவையான திருப்பதி லட்டுவை செய்து விடலாம்..எப்படி என்று பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:
பூந்தி தயார் செய்ய:
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
கடலை மாவு - 1 கப்
பால் - 1.5 டம்ளர்
நெய் - பொறித்து எடுப்பதற்கான அளவு
சர்க்கரை பாகு தயார் செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1.5 கப்
இறுதியாக:
நெய்யில் வறுத்த முந்திரி,கருப்பு திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - 4 (தட்டி வைத்துக்கொள்ளுங்கள்)
கற்கண்டு - 2 ஸ்பூன்
பச்சை கற்பூரம் - ஒரு சிட்டிகை
திருப்பதி லட்டு செய்முறை:
முதலில், லட்டு செய்வதற்கு தேவையான பூந்தியை தயார் செய்யலாம்...அதற்கு, ஒரு அகல பாத்திரத்தில் சர்க்கரை, அரிசி மாவு மற்றும் 4 ஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
சர்க்கரை நன்கு கரைந்ததற்கு பின் கடலை மாவை சலித்து சேர்த்துக் கொள்ளுங்கள்
அதன் பிறகு, இந்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
இப்போது அடுப்பில், ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் சுத்தமான நெய்யை சேர்க்கவும். மிதமான தீயில் நெய் நன்றாக உருகியதும் சல்லடை கரண்டியை பயன்படுத்தி நாம் தயார் செய்து வைத்த மாவை ஊற்றுங்கள்
மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்தால் போதும் நமக்கு முத்து முத்தான பூந்தி கிடைத்து விடும். இப்போது, இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
[குறிப்பு:பூந்தி மொறு மொறுப்பாக வந்துவிட கூடாது. சாப்டாக இருக்க வேண்டும்]
சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளலாம்..
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். அதன் பின் 1 கப் சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்கள்
சர்க்கரை நன்கு கொதித்து ஒரு கம்பி பதம் வந்ததும், நாம் பொறித்து வைத்த பூந்தியை சர்க்கரை பாகில் சேர்த்துகொள்ளுங்கள்
இப்போது, மிதமான தீயில் 10 நிமிடத்திற்கு விட்டால், சர்க்கரை பாகில் பூந்தி நன்றாக ஊறி விடும்
அதன் பிறகு, இந்த பூந்தியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்
இப்போது, இதில் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி, திராட்சை, இடித்து வைத்த ஏலக்காய், 2 ஸ்பூன் கற்கண்டு மற்றும் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்துக்கொள்ளுங்கள்
கடைசியாக 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு உருண்டையாக பிடித்து எடுத்தால் திருப்பது லட்டு தயார்...
திருப்பதி லட்டு மனத்திற்கு காரணம்: சுத்தமான நெய்யில் பூந்தியை வறுத்து எடுத்து இறுதியாக பச்சை கற்பூரம் சேர்க்கும் போது கோயில் மனம் வந்துவிடும். அதனால், நாம் திருப்பதி லட்டுவை வீட்டில் செய்யும் போது பச்சை கற்பூரத்தை சேர்ப்பதற்கு மறந்து விடக்கூடாது.