சென்னை: கோடை காலம் வந்த உடன், உடல் சூடு அதிகரிக்கும். இதற்கு மருத்துவர்கள் கூறும் சிறந்த தீர்வு, இளநீர்தான். ஒரு இளநீர் சைஸ் வாரியாக ரூ. 40 முதல் ரூ. 60 வரை விற்கப்படும் நிலையில் பொதுமக்கள் அதை வாங்கி உட்கொள்கின்றனர். எவ்வித கலப்படமும் இன்றி முழுமையாகவும், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் கிடைப்பது இளநீர் ஒன்று மட்டும்தான் என நினைக்கின்றனர். ஆனால், அதற்கும் முட்டு கட்டை போடும் விதமாக, இளநீரிலும் பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாக கூறுகிறார் சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார்.
இளநீரில் பூச்சிக்கொல்லியா? அது எப்படி?
இது குறித்து பொள்ளாச்சியில் மேற்கொள்ளப்படும் தென்னை விவசாயம் தொடர்பான தகவல்களை ஈடிவி பாரத் தமிழ் விவசாயிகள் மற்றும் தென்னை தோப்பு பணியாளர்கள் உள்ளிட்ட பலரிடம் கேட்டறிந்தது. அப்போது பேசிய அவர்கள், கடந்த 25 வருடங்களுக்கு முன்பு கலப்பின தென்னை நாற்றுகள் தமிழகத்தின் பல்வேறு விவசாயிகளை வெகுவாக கவர்ந்தது எனக்கூறியுள்ளனர். இதற்கான காரணம் குறைந்த வருடத்தில் நிறைவான மகசூல் ஈட்டும் என்பதே. அதாவது நெட்டை மரம் குட்டை மரம் என்பார்கள்.
இளநீருக்காக மட்டுமே பயிரிடப்படும் இந்த வகை கலப்பின மரங்கள் சுமார் 3 வருடத்தில் இருந்து 5 வருடத்திற்குள் காய் காய்க்க ஆரம்பித்து விடும். ஆனால் நாட்டு தென்னைகள் வளர்ந்து காய் காய்க்க சுமார் 10 வருடங்களுக்கு மேல் ஆகும். இதனால் விவசாயிகள் பலர் தங்கள் நிலத்தில் நாட்டு தென்னைகள் நடாமல் கலப்பினத் தென்னை நாற்றுகளை நட்டு வைத்துள்ளனர்.
இந்த தென்னை நாற்றுகள் காய் காய்க்க ஆரம்பித்து, நாட்கள் கடக்கக் கடக்க அதன் இனிப்பு தன்மையிலும், தரத்திலும் மாற்றம் ஏற்படுவதுடன் வெள்ளை ஈ தாக்குதலுக்கும் ஆளாகிறது என விவசாயிகள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதன் வேர் பகுதி நாட்டு தென்னைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு மிக மெல்லியதாக இருக்கும் நிலையில், அதன் வேர் பகுதியில் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் தென்னை வண்டு உள்ளிட்ட பூச்சிகள் வருவதாகவும் இதனால் மகசூல் ஈட்ட முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதை கட்டுப்படுத்தவும், காய் அதிகம் காய்க்க செய்வதற்காகவும் வேண்டி வேர் பகுதியில், மருந்துகளை கட்டி வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தேவையான அனைத்து மருந்துகளும், கடைகளில் விற்கப்படும் நிலையில் விவசாயிகள் பலர் அந்த மருந்துகளை வாங்கி வேர்களில் வைத்து கட்டி விடுகின்றனர். இது ஒருபுறம் இருக்க தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளை சேர்ந்த பெரும் வியாபாரிகள் மகசூலில் மட்டும் கவனம் செலுத்தி ஈல்டு எடுப்பதற்காக இதுபோன்ற பல்வேறு வழிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இதனால் தென்னையின் வேரில் வைக்கப்படும் அந்த மருந்து இளநீலும் கலந்து அதை பொதுமக்கள் குடிக்கும்போது அவர்களுக்கும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் வருவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த இளநீரை குழந்தைகள் மற்றும் நோயாளிகள் என பலரும் நோய் தீர்க்கும் அரு மருந்து என நினைத்து குடித்து வரும் நிலையில் அதிலும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு யாருக்கும் எந்த இழப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.
பனை நுங்கில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுகிறதா? இந்த கேள்விக்கு பதில் அளித்த, சென்னை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், நுங்கில் இதுபோன்ற முறைகேடுகள் செய்வது மிக கடினம் எனவும் அதை செய்ய முடியாது எனவும் கூறினார். இதனால் எவ்வித அச்சமும் இன்றி பொதுமக்கள் நுங்கை தாராளமாக வாங்கி உட்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சர் வெளியிட்ட வீடியோ.!
மேலும், நுங்கு சாப்பிட வேண்டும் என்பதில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் தனது எக்ஸ்(x) பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வெப்ப அலை வீசுவதால் நீங்களும் இவைகளை பின்பற்றலாமே எனவும் இதை அமைச்சராக சொல்லவில்லை சக மனிதனாக சொல்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மாம்பழத்தை இப்படி சாப்பிட்டா கேன்சர் அபாயம்! எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி - How To Identify The Good Mango