சென்னை:ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கத்திலும், தீங்கு விளைவிக்கும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும், இந்நோய் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதையும், மருந்துகளை கண்டறிவதையும் முக்கிய நோக்கமாக கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், மூளை கட்டி (Brain Tumor) என்றால் என்ன? அதன் அறிகுறிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சென்னை ரேலா மருத்துவமனையின் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் மருத்துவர் அன்பு செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதை பார்க்கலாம்.
மூளை கட்டி என்றால் என்ன?:மூளையின் செல்களில் இருந்து ஒரு கட்டி உருவாகி அது காலப்போக்கில் பெரிய கட்டியாக மாறலாம். இந்த கட்டி சில நேரங்களில் தீங்கற்ற கட்டியாக (benign tumor) இருக்கலாம். அல்லது வீரியம் மிக்க கட்டி அதாவது புற்றுக்கட்டியாகவும் (malignant tumor) இருக்கலாம். இது தவிர உடலின் மற்ற பாகங்களில்.. உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நுரையீரலில் இருந்தோ, மார்பகத்தில் இருந்தோ அல்லது தாய்ராய்டிலோ புற்று நோய் உருவாகி அது மூளை வரை சென்று மூளை கட்டியை (Brain Tumor) உருவாக்கலாம். அதை மெட்டாஸ்டேடிக் கட்டி (metastatic tumor) என மருத்துவ மொழியில் கூறுவார்கள்.
மூளை கட்டி யார் யாரை பாதிக்கும்?:இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். பாதிக்கப்படும் நபருக்கு தலைவலி, வாந்தி, வலிப்பு மற்றும் உடல் சோர்வோ இருக்கலாம். சில நேரங்களில் அறிகுறிகள் மிக குறைவாகவும் இருக்கும். சிலருக்கு பேச்சில் குளரல், நினைவாற்றல் இழப்பு, நடத்தையில் மாற்றம் உள்ளிட்ட சில அறிகுறிகள் இருக்கலாம்.