ஹைதராபாத்:இந்தியாவில்,ஒரு நாளைக்கு சராசரியாக 450 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற அதிர்ச்சி தரவுகள் வெளியாகியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன? காதல் தோல்வி..ஏமாற்றம்..விரக்தி..கடன் பிரச்சனை..குடும்பச் சண்டையா? இப்படி, நாளுக்கு நாள் தற்கொலை விகிதம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் (SUICIDE PREVENTION DAY 2024) கடைப்பிடிக்கப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு முடிவு எடுக்க காரணம் என்ன? தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி? குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் அவர்களை எவ்வாறு அடையாளம் காண வேண்டும்? போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஒரு நாளைக்கு எத்தனை பேர் தற்கொலை செய்கிறார்கள்?: கடந்த ஆண்டு கணக்கீடுகளின்படி, இந்தியாவில் பல்வேறு காரணங்களால் சுமார் 1.64 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் ஆண்கள் 1.10 லட்சம் பேரும், பெண்கள் 54 ஆயிரம் பேரும் உள்ளனர். அதாவது, இந்தக் கணக்கின்படி ஒரு நாளைக்கு சராசரியாக 450 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
நம்பிக்கை கொடுங்கள் (GETTY IMAGES) இளம் வயது தற்கொலை: கடந்த காலங்களில் குடும்பப் பொறுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு கூறுகிறது. ஆனால், தற்போது இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என குற்றப் புலனாய்வுப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மேலும், சாலை விபத்துக்களுக்குப் பிறகு பெரும்பாலான இறப்புகள் தற்கொலைகளால் ஏற்படுகின்றன என்பதை வெளிப்படுத்துகின்றன.
தற்கொலை செய்து கொள்ள காரணம்:வாழ்க்கையில் தனியாக இருக்கிறோம், யாரும் துணை இல்லை என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை சூழ்ந்தால் அதிக மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். பிரச்சனைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்று தெரியாமல், எப்படி சமாளிப்பது என்று தெரியாமல், மரணம் தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள். தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களில் இருந்து விடுபட தற்கொலைதான் ஒரே வழி என்று நினைக்கிறார்கள்.
தனித்து விடாதீர்கள் (GETTY IMAGES)
"தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருப்பவர்களை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுவிடலாம். விரக்தியில் திரும்பத் திரும்ப பேசுவது, நொடிப் பொழுதில் கோபம் கொள்வது, தன்னால் எந்த பயனும் இல்லாதது போல் பேசுவது, குடும்பக் கொண்டாட்டங்கள் உட்பட எல்லோரையும் விட்டு விலகி இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களைப் கண்டுகொள்ளாமல் விடாதீர்கள்.அவர்களுக்கு தைரியம் கொடுங்கள். அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்" என்கிறார் மனநல மருத்துவர் கவிதாபிரசன்னா
தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் இருப்பவர்களை இப்படி அடையாளம் காணலாம்:
- அன்றாடப் பணிகளில் கவனக்குறைவு
- காரணமே இல்லாமல் அழுவது
- அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது
- அதிகமாக தூங்குவது அல்லது தூக்கமின்மை
- எப்போதும் தனியாக அல்லது இருட்டில் இருப்பதை விரும்புவது
- குடும்ப உறுப்பினர்களிடம் கூட பேசாமல் இருப்பது
- தங்களுக்கு மிகவும் பிடித்தமாக பொருட்களை கூட மற்றவர்களுக்கு கொடுப்பது
- அதிக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது
- வாழ விரும்பாதது போல் பேசுவது
தற்கொலை எதற்கும் தீர்வல்ல (Credits - ETV Bharat TamilNadu)
நண்பர்கள்/குடும்பத்தினர் கவனத்திற்கு:
- தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள் எவரும் ஒரே நாளில் இந்த முடிவை எடுப்பது கிடையாது
- அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவர்கள் கவனிக்கப்பட வேண்டும்
- மேல் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை கண்டால், அவர்களை தனித்து விடாதீர்கள்
- மண்ணெண்ணெய், பூச்சிக்கொல்லி மருந்து, கயிறு போன்றவற்றை கண் முன்னே வைக்காதீர்கள்
- ஒரே அறையில் அவர்களை அதிக நேரம் தங்க விடாதீர்கள்
- விரைவாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்
இதையும் படிங்க:மைக்ரேன் தலைவலி பிரச்சனையா உங்களுக்கு? இதை சாப்பிட்டால் சரியாகுமாம்..மருத்துவர் கூறும் அட்வைஸ் என்ன?
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்