நமது அண்டை நாடான சீனாவில், ஹியுமன் மெட்டநிமோ வைரஸ் எனப்படும் எச்.எம்.பி.வி (HMPV) பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்தி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கரோனா தொற்று பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்த நிலையில், தற்போது பரவி வரும் HMPV தொற்று, பிற நாடுகளை தீவிர கண்காணிப்பில் ஈடுபட செய்துள்ளது.
இந்த புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவில் பரவி வந்த எச்.எம்.பி.வி தொற்று இந்தியாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் 8 மற்றும் 3 மாத குழந்தைகளுக்கு இந்த HMPV தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர் சரவண பாண்டியன் பேட்டி (Credit - Etv Bharat Tamil Nadu) சென்னையில் தொற்று: இதே போல, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 மாத ஆண் குழந்தைக்கும், சென்னை மற்றும் சேலத்தில், காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு எச்எம்பிவி ( HMPV ) தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கரோனா ஏற்படுத்திய இழப்பை மக்கள் மறந்து வரும் வந்த நிலையில், இந்த புதிய தொற்று மக்களை பீதியடைய செய்துள்ளது. மேலும், Hmpv கரோனாவை போல் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? ஏற்கனவே இந்தியாவில் இந்த வைரஸ் உள்ளதா? சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகை தான் இதுவா? என மக்கள் மத்தியில் எழும் சந்தேகங்களுக்கு மருத்துவர் கூறும் பதிலை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்..
பழையது தான்: 'மக்களிடையே குறிப்பாக குழந்தைகள் மத்தியில் பரவும் HMPV தொற்று, ஏற்கனவே நிலுவையில் உள்ளது தான்' என்கிறார் ரேலா மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் சரவண பாண்டியன். காய்ச்சல், சளி, இருமல் என சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் ரெஸ்பிரட்டரி சின்கிடல் வைரஸ் பிரிவை சார்ந்தது.
இது புதிதாக தோன்றியதா? என்றால், இல்லை என்பதே மருத்துவர்களின் பதில். அதே போல, 'சீனாவில் பரவும் வைரஸ் மரபணு ரீதியாக மாற்றம் அடைந்துள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. தற்போது குழந்தைகளை பாதித்துள்ள HMPV தொற்று, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு சளி, காய்ச்சல் இருமல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே போல, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும்'
பீதியடைய வேண்டாம்: 'இந்த தொற்றுக்கு என தனிப்பட்ட சிகிச்சை முறை எதுவும் கிடையாது. சாதாரண காய்ச்சலுக்கு வழங்கப்படும் சிகிச்சை போதுமானது. இந்த தொற்று குறித்து மக்கள் அச்சமடைய தேவையில்லை' என்றார். முன்னதாக, எச்.எம்.பி.வி., தொற்று பரவலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். நாட்டின் சுகாதார கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நெறிமுறைகள் விழிப்புடன் உள்ளன. நம் சுகாதாரத்துறை எவ்வித சவால்களையும் சமாளிக்கும் திறனுடன் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:HMPV வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்..பொது சுகாதார இயக்குநரகம் கொடுத்த நல்ல செய்தி!
பொறுப்புத் துறப்பு:இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.