நீரிழிவு என்பது ஒரு தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத நோய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த நோயை முறையான உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, ஆன்டிஆக்ஸிடன்ட்களை உட்கொள்வது போன்ற எளிய முறைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இயற்கையான பல உணவுகள் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அதில் குறிப்பாக, மரத்தின் தண்டு முதல் பழம் வரை பல நன்மைகளை தரும் வாழை மரத்தின் பூவில் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் கூறுகள் இருப்பதாக அய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், நீரிழிவு நோய்க்கு வாழைப்பூ என்ன நன்மைகளை தரும் என்பதையும், அதை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த தொகுப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
2011ல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு எடை அதிகமுள்ள எலிகள் மற்றும் இரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரையின் அளவுகள் அதிகமாக இருக்கும் எலிகளுக்கு வாழைப்பூ கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், எலிகள் வாழைப்பூவை உண்டு வர, இரத்த சர்க்கரை அளவு கணிசமாகக் குறைவதாக ஆய்வின் இறுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல, வாழைப்பூவை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஒரு குறிப்பிட்ட வகை புரதத்தின் உற்பத்தியைக் குறைக்கிறது என தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தால் 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
'வாழைப்பூ மற்றும் வாழை தண்டு ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக இந்த கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும், இவற்றை உட்கொள்வதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை தருவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டும், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன எனவும் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் உயர் உள்ளடக்கமும் நல்லளவில் உள்ளது. அதனால்தான் வாழைப்பூ நோய் மேலாண்மைக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது.