வேகமாக நடப்பவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இருதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள தோஷிஷா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், சாதாரணமாக நடப்பவர்களை விட வேகமாக நடப்பவர்களுக்கு இந்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பான கட்டுரை சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியாகியுள்ளது.
உடல் பருமன் மற்றும் இடுப்பளவு அதிகம் கொண்ட 25 ஆயிரம் பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவினரை வேகமாகவும், மற்ற குழுவினரை சாதரனமாக நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், விறுவிறுப்பாக நடப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் கெட்ட கொழுப்பு (டிஸ்லிபிடெமியா) அதிகமாவதால் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், வேகமாக நடப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பல முக்கிய விஷயங்களை கண்டறிந்துள்ளனர்.
'விறுவிறுப்பாக நடப்பதன் பலன்கள்'..
"விறுவிறுப்பாக நடப்பவர்கள் பெரும்பாலும் சிறந்த கார்டியோஸ்பிரேட்டரி ஃபிட்னஸுடன் இருப்பார்கள். அவர்களுக்கு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைவாக இருக்கும். உடல் பருமன் மற்றும் செரிமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. விறுவிறுப்பாக நடப்பவர்களுக்கு பி.பி., நீரிழிவு போன்ற நோய்கள் குறைவாகவே இருக்கும்" என்று தோஷிஷா பல்கலைக்கழக பேராசிரியரும் முன்னணி ஆராய்ச்சியாளருமான கோஜிரோ இஷி கூறினார்.