சென்னை:மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான இரு வார விழா'வாக (National Eye Donation Fortnight 2024) அறிவித்து கடைபிடித்து வருகின்றனர்.
குறிப்பாக, கண் தானம் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் அச்சங்களை அகற்றும் நோக்கத்துடனும் மரணத்திற்குப் பின் கண் தானம் செய்யப்படுவதை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா அனுசரிக்கப்படுகிறது. மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கண் தானம் செய்துள்ளதை மரியாதை செலுத்தும் விதமாக இந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முதல் கண் வங்கியை நிறுவிய சென்னை மருத்துவர்: 1948ம் ஆண்டு டாக்டர் ஆர்.இ.எஸ் முத்தையாவால் இந்தியாவின் முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், 1945ம் ஆண்டு டாக்டர் முத்தையாவால் சென்னையில் உள்ள மண்டல கண் மருத்துவ இயல் நிலையத்தில் (Regional Institute of Ophthalmology) நாட்டின் முதல் கண் வங்கி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கண் வங்கி தொடங்கப்பட்டது முதல், கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 1960 ஆம் ஆண்டில் இந்தூரில் உள்ள பேராசிரியர் ஆர்.பி.தண்டா என்பவரால் முதன்முதலில் வெற்றிகரமாக கார்னியல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
கண் தானம் செய்தவர்கள் எண்ணிக்கை: தேசிய சுகாதார நிறுவனத்தின் (National Institutes of Health) 2023ம் ஆண்டின் அறிக்கை அடிப்படையில், இது வரை 740 நபர்கள் இந்திய கண் வங்கி சங்கத்தின் கீழ் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, 2017-2018 ஆம் ஆண்டில் 71,700 நன்கொடையாளர்களின் கண்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
22% முதல் 28% சதவீத மக்கள் தன்னார்வத்தில் கண் தானம் செய்ய வருவதாகவும் 50 % மக்கள் மருத்துவமனையில் நடத்தப்படும் கார்னியல் மீட்டெடுப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வால் கண் தானம் செய்கின்றனர்.
பார்வையிழப்பு:பார்வையிழப்பிற்கு கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையே ஒரே தீர்வாக இருப்பதாக கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சுமார் 1.1 மில்லியன் நபர்கள் பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 60 % பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.