சென்னை:இந்திய அளவில் பிரபலமான 36 புரோடின் சப்ளிமெண்டுகள் 70 சதவீதம் தவறான புரதத் தகவல்களைக் கொண்டிருந்ததாக கடந்த மாதம் செய்திகள் வெளியாகின. ஆய்வின் அடிப்படையில் வெளியான இந்த தகவலை அடுத்து இது குறித்து திருத்தப்பட்ட உணவு வழிகாட்டுதல்கள் பட்டியலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தியர்கள் புரோடின் சப்ளிமெண்டுகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ஆர்.ஹேமலதா தலைமையிலான வல்லுநர்கள் குழு இது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், புரோடின் சப்ளிமெண்டுகளை தொடர்ந்து உட்கொள்ளும்போது, எலும்பு தாது இழப்பு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற உடல்நல அபாயங்கள் ஏற்படும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடல் ஆற்றலுக்கான உட்கொள்ளலில் 45 சதவீதம் தினை, கம்பு வரகு கடலை கோதுமை உள்ளிட்ட பல தானியங்களில் இருந்தும், பருப்பு வகைகள், பீன்ஸ் மற்றும் இறைச்சியில் இருந்து 15 சதவீதமும் ஒட்டுமொத்தமாக 5 சதவீதம் சர்க்கரையின் அளவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மீதமுள்ள கலோரிகள் கொட்டைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.