குளிர்காலத்தில் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் அழையா விருந்தாளியாக வந்து விடுகின்றன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கிட்டத்தட்ட அனைவரும் இந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், இரவில் தூங்க முடியாமல் தவிப்பவர்களும் பலர். ஆனால், வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களை வைத்து இந்தப் பிரச்சனைகளில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- இஞ்சி மற்றும் தேன் சேர்த்து டீ குடிப்பதால் இருமல் மற்றும் சளி குறையும். "Honey and ginger, a natural remedy for cold and cough" எனும் தலைப்பில் NCBI நடத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இஞ்சி மற்றும் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருமல் மற்றும் சளியைக் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது.
- 7-8 துளசி இலைகள், ஒரு சிறிய துண்டு இஞ்சி, 2 பூண்டு, ஒரு டீஸ்பூன் சீரகம், மஞ்சள், 4 மிளகு ஆகியவற்றை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- துளசியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற சேர்மங்கள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும், சளி மற்றும் இருமலின் தீவிரத்தையும் குறைக்கவும் உதவும் என 2017ம் ஆண்டு வெளியான NIH ஆய்வில் தெரியவந்துள்ளது.
- ஆரோக்கியத்திற்கு கசப்பு அவசியம்: சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தடுக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு கசாயம் ஒரு சிறந்த மருந்தாகும் என்கிறார், திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்த அரசு சித்த கல்லூரி மருத்துவர் சுபாஷ் சந்திரன். அவர் கூறுகையில், "உணவில் கொஞ்சம் கசப்பு சுவையை சேர்க்க வேண்டும். அறுசுவைகளில் கசப்பை நாம் அறவே நீக்குவதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நீரிழிவு நோய்க்கு வழங்கப்படும் மருந்தில் கசப்பு, துவர்ப்பு அதிகம் பயன்படுத்துகிறோம்" என்றார்.
- தூங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான பாலில் மஞ்சள் சேர்த்து குடிப்பது, வைட்டமின் சி நிறைந்த பழங்களான கொய்யா, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுவது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது. வழக்கமான வைட்டமின் சி நுகர்வு, சளி பிரச்சனையை பெரியவர்களுக்கு 8% குழந்தைகளுக்கு 14% ஆகவும் குறைக்கும் என்கிறது ஆய்வு.
கவனம்:குளிர்ச்சியான மற்றும் இனிப்பு பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டாம் எனக் கூறும் மருத்துவர் மருத்துவர் சுபாஷ் சந்திரன், ஐஸ், ஜூஸ் போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இனிப்பு கபத்தை மேலும் அதிகப்படுத்தும். சூடான, இயற்கையான பொருட்களை சாப்பிட வேண்டும். இந்த குறிப்புகளுடன், வறுத்த உணவுகள், வெளி உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றைக் குறைக்க வேண்டும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடுவது சிறந்தது.
அலட்சியம் வேண்டாம்:மாறிவரும் பருவநிலை காரணமாக குழந்தைகளுக்கு சளி, இருமல் தொடர்பான சுவாச பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. உங்கள் குழந்தையும் வறட்டு இருமலால் அவதிப்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.