சென்னை:சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 42 வயது பெண்ணுக்கு இரண்டு கைகளிலும் வெட்டப்பட்ட நிலையில் மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் ஒன்றாக இணைத்து 23 மருத்துவர்கள் கொண்ட குழு சாதனைப் படைத்துள்ளது.
சென்னை கண்ணகி நகரை சேர்ந்த 23 வயது இளைஞர் தன் தந்தை இறப்பிற்கு, தனது தாய் காதலனுடன் சென்றது தான் காரணம் என நினைத்து பெரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் இருந்த தனது தாயின் இரண்டு கை மணிக்கட்டுகளிலும் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவர் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
பாதிப்புகள் என்ன?: தொடர்ந்து மருத்துவ குழுவினர் நடத்திய பரிசோதனையில், அவரது இடது கை மணிக்கட்டு கிட்டத்தட்ட மொத்தமாக துண்டிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெரும்பாலான தசைநாளம்கள், 2 பெரிய நரம்புகள் மற்றும் 1 பெரிய ரத்த நாளத்தின் முழுமையான வெட்டப்பட்டு ஒரு திசுவால் மட்டுமே வெட்டப்பட்ட மணிக்கட்டு பிடிக்கப்பட்டது.
சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ குழு (Credit - ETV Bharat Tamil Nadu) வலது கை மணிக்கட்டு பாதி வெட்டப்பட்டத்தில் எலும்பு முறிவு, 1 பெரிய நாளத்தில் காயம் அடைந்து இருப்பது தெரியவந்தது. அத்துடன் முதுகெலும்பு பகுதிகளிலும் தலையின் உச்சிப்பகுதியிலும் ஆழமான காயங்கள் இருந்ததுள்ளது. இந்த நிலையில், அவருக்கு அனைத்து முதலுதவியும் செய்த மருத்துவ குழுவினர், கை அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர். சுமார் 8 மணி நேரம் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த நிலையில் இரண்டு கைகளையும் மீண்டும் பொருத்தி உள்ளனர்.
இதையும் படிங்க:பாம்பு நாக்கு டாட்டூ உயிருக்கு ஆபத்தா? அசாதாரண டாட்டூக்களின் பின்னணி உளவியல் என்ன?
அதனை தொடர்ந்து உடலில் மற்ற இடங்களில் ஏற்பட்ட வெட்டு காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த பெண் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையின் முதல்வருமான தேரணிராஜன் கூறும்போது, "42 வயது பெண்ணிற்கு 2 கைகளிலும் வெட்டப்பட்டு, ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு பரிந்துரைச் செய்யப்பட்டார்.
இலவச மருத்துவம்: இந்த இரண்டு கைகளிலும் ஒரே சமயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை ஒரு சாதனை. தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் வரை செலவாகும் ஆனால் இலவசமாக இங்கு செய்யப்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு தான் அரசு மருத்துவமனை உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, மயக்கவியல் மருத்துவம், எலும்பியல் மருத்துவர் உள்ளிட்ட 23 மருத்துவர்கள் கொண்டக்குழு 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்தது எனக்கூறும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத்துறையின் மருத்துவர் சுகுமார், "6 மாதங்கள் அவர் கைகள் சரியாவதற்கு தேவைப்படும்" என்றார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், "அவருக்கு பிசியாேதெரபி சிகிச்சை அளித்து, கைகளுக்கு பயிற்சியும் அளிக்க வேண்டும். ஒரு கையில் 95 சதவீதமும், ஒரு கையில் 80 சதவீதம் வெட்டப்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும்:அதனை எடுத்து முதலில் எலும்பையும், அதனைத் தொடர்ந்த ரத்தநாளங்கள், தசைகளையும் இணைத்துள்ளோம். ஆனால் அனைத்து விபத்திலும் கை அல்லது காலில் ஏற்படும் முறிவு அடிப்படுதல் போன்றவற்றிக்கு இதேபோன்ற சிகிச்சை அளிக்க முடியாது. விபத்து ஏற்பட்ட உடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் ரத்தம் வெளியேறுவதும் தடுத்து நிறுத்தப்படும். உடைப்பு ஏற்பட்ட பகுதியை மேலே உயர்த்தி வைக்க வேண்டும். அதன் பின்னர் வந்தால் அவர்களின் முறிவுப் பகுதிக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டிற்கு எப்போது வரும்? உண்மையில் புற்றுநோயை தடுக்குமா? மூத்த மருத்துவர் விளக்கம்!