சென்னை: கிண்டியில் இயங்கிவரும்கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரத்தில் அனைத்து வகையாக புற்றுநோய்க்கு கட்டணமின்றி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருக்கும் தொழில்நுட்ப கருவிகள் என்ன? புற்றுநோயிற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? என்பதை விளக்குகிறார் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் சுஜய் சுஷிகர்.
மருத்துவர் சுஜய் சுஷிகர் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், "கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனைத்து புற்றுநோய்க்கும் அதன் நிலைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. மார்பக புற்றுநோய், கருமுட்டை புற்றுநோய், கர்ப்பபை புற்றுநோய் பெண்களுக்கு அதிகளவில் காணப்படுகிறது. வாய்புற்றுநோய், இரைப்பை, உணவுக் குழாய் ஆகியவற்றில் ஆண்களுக்கு அதிகளவில் புற்றுநோய் காணப்படுகிறது.
மார்பக புற்றுநோயால் தாழ்வு மனப்பான்மை?: பெண்களுக்கு அதிகளவில் மார்பக புற்றுநோய் வருகிறது. பெண்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவதற்கு வந்துவிடுகின்றனர். இதனால் 90 சதவீதத்திற்கும் மேல் சரி செய்து விடலாம். மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பு முழுவதும் அகற்ற வேண்டியநிலை இருந்தது. அதனால் பெண்களுக்கு புற்றுநோய் குணமடைந்தாலும், அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டு இருந்தது.
தற்பொழுது 80 சதவீதம் பேர் ஆரம்ப நிலையில் வருவதால், ஆன்கோ (Oncosurgery )பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதால் முழு மார்பை அகற்றுவதை தவிர்கிறோம். மார்பில் புற்றுநோய் இருந்தால் புற்றுநோய் பகுதி சுற்றி உள்ள திசுக்களுடன் சேர்த்து அகற்ற வேண்டி இருக்கிறது. அதனால் 40 சதவீதம் திசுக்கள் எடுக்கப்பட்டப் பின்னர், அந்த மார்பு மற்றொரு மார்பைவிட சீரமைப்பில் குறைவாக இருக்கும்" என்றார்.
மார்பகத்தை அகற்ற வேண்டாம்:அதனை தொடர்ந்து பேசியவர்," ஆனால் தற்பொழுது உள்ள நவீன கருவிகள் மற்றும் ஆன்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் சுற்றி உள்ள கொழுப்புகளை எடுத்து, எடுக்கும் திசுவிற்கு பதிலாக பொருத்தி, அந்த மார்பை முழுவதுமாக எடுக்காமல் இருக்கிறோம். இதனால் ஒரு மார்பிற்கும், மற்றொரு மார்பிற்கும் ஒரே மாதிரியான நிலையை கொடுப்பதால், நோய் குணப்படுத்துவதுடன்,அவர்களுக்கு தயக்கமற்ற மனநிலையை கொடுக்க முடிகிறது.
70 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவற்றில் 40 பேருக்கு மார்பை எடுக்காமல் ஆன்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துள்ளோம். மார்ப்பில் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யும் போதும் அக்குள் பகுதியில் உள்ள நெறிக்கட்டிகளையும் சேர்த்து எடுக்க வேண்டி வரும்.
கருப்பை புற்றுநோய் வயதானவர்களுக்குத் தான் அதிகளவில் வருகிறது. வயதானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது குணமடைவது சிரமம். தற்பொழுது அட்வான்ஸ் லேப்ராஸ்கோபி டெக்னாலாஜி முறையில் , வயிற்றை கிழிக்காமல் சிறிய துளைகள் மூலம் கர்ப்பை குழந்தை பிறக்கும் துவாரம் மூலமாக எடுத்துவிடுவதால் அவர்களுக்கு வயிற்றை கிழிக்க வேண்டியதில்லை.