சென்னை:புற்றுநோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக புற்றுநோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அப்போலோ மருத்துவமனையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், அப்போலோ புற்றுநோய் மையத்தின் முதுநிலை மருத்துவ நிபுணர் சங்கர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “புற்றுநோய் பாதிப்பை இந்தியாவில் அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும். இதனால் நோய் பாதிப்பு எந்தப் பகுதியில் அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப பரிசோதனையை அதிகப்படுத்த முடியும். மேலும் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சையை அளிக்க முடியும்.
இந்தியாவில் மரபணு மாற்றம் உள்ள புற்றுநோய் பாதிப்பு இருப்பதையும் தெரிந்துக் கொண்டுள்ளோம். மரபணு மாற்றம் உள்ள புற்றுநோயின் தன்மைக்கேற்ப அவர்களுக்கு மாத்திரைகளை மாற்றி அளிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மையத்தின் முதுநிலை மருத்துவ நிபுணர் பிரசாத் ஈஸ்வரன் கூறுகையில், “புற்றுநோய்க்கான மருந்துகளில் தற்போது அதிகளவில் முன்னேற்றம் வந்துள்ளது. இதனால் புற்றுநோயால் பாதித்தவர்கள் இறந்துவிடுவார்கள் என்ற நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப நிலையில் கண்டுப்பிடித்தால் நோயினை முற்றிலும் குணப்படுத்த முடியும்” என்றார்.
தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கத்தின் (TAMPOS) தலைவர் கலைச்செல்வி கூறுகையில், "வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறைகளில் மாற்றம், உடல் பருமன் போன்றவற்றாலும் மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. இளம் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் வளர்ச்சியால், 30 வயதில் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வருவதற்கும் வாய்ப்புள்ளது. இவற்றை தடுப்பதற்கு புற்றுநோயை அறிவிக்கப்பட்ட நோயாக வகைப்படுத்த வேண்டும்." என்றார்.