சென்னை:ஓமன் நாட்டைச் சேர்ந்த 30 வயதான நோயாளிக்கு நாட்பட்ட வலியிலிருந்து நிவாரணத்தை வழங்கி அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது சென்னை அப்போலோ கேன்சர் சென்டர் . பிற சிகிச்சைகள் பயனளிக்கத் தவறியிருக்கும்போது நாட்பட்ட, நரம்புடன் தொடர்புடைய வலியால் அவதியுறும் நபர்களுக்கு புதிய சிகிச்சை முறை பயனளிப்பதாக உள்ளது.
விரைச்சிரையில் (Testicle) உருவான ஒரு கட்டிக்கான அறுவைசிகிச்சையை ஓமன் நாட்டில் செய்ததற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இடுப்பு கவட்டை மற்றும் மேற்புற தொடைப்பகுதியில் கடுமையான வலி தொடர்ந்து இந்நோயாளிக்கு இருந்து வந்திருக்கிறது.
விரிவான மதிப்பாய்வு மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய மருத்துவக் குழுவின் முயற்சிகளுக்குப் பிறகு, கீழ்ப்புற வயிற்று சுவர் மற்றும் மேற்புற தொடையுடன் சந்திக்கின்ற பகுதியில் சேதமடைந்த ஒரு நரம்பின் காரணமாக, இந்த கடுமையான வலி இந்நோயாளிக்குத் தோன்றுவது கண்டறியப்பட்டது. முதன்மையான உணர்திறன் நரம்பு, முதுகுத்தண்டிலிருந்து தொடங்கி, தசைகளின் வழியாக கடந்து சென்று கவட்டைப் பகுதியை சென்றடைகிறது.
இப்பகுதியில் இந்நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டபோது, இந்நரம்பு சேதமடைந்ததன் காரணமாக கடுமையான வலி உருவாகி தொடர்ந்து இருந்திருக்கிறது. அடிவயிறு சார்ந்த கவட்டைப் பகுதியில் நரம்புக் குத்துவலி என்றும் இது அறியப்படுகிறது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு அதிகமாக நீடிக்கும் வலியானது, நாட்பட்ட வலி என வரையறுக்கப்படுகிறது.
- இதையும் படிங்க:சென்னை மருத்துவமனையில் ரோபோட்டிக்ஸ் மூலம் அறுவை சிகிச்சை; மருத்துவ கட்டணம் எவ்வளவு? பாதுகாப்பானதா? மருத்துவர் விளக்கம்!
உலகளவில் லட்சக்கணக்கான நபர்களை பாதிக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை இது. இந்நோயாளிக்கான வலியைத் தணிப்பதற்காக தங்களது அனுபவம் மற்றும் புத்தாக்கத்தின் அடிப்படையில் ACC – ஐ சேர்ந்த முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை மற்றும் வலி நிவாரண சிறப்பு நிபுணர்களின் குழு, இந்நோயாளியின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு இதுவரை முயற்சிக்கப்படாத ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியது.
நோயாளியின் முதுகுத்தண்டில் உணர்திறன் நரம்புகளைத் (DRG) தூண்டுவதற்கு ஒரு முதுகுத்தண்டு முடுக்கியைப் பொருத்தியதன் வழியாக சேதமடைந்த நரம்பிலிருந்து உருவாகும் வலி உணர்வுகளை மருத்துவக் குழு வெற்றிகரமாக தடுத்திருக்கிறது. நரம்பு சேதத்தினால் வலி உருவாகின்ற நோயாளிகளுக்கும் மற்றும் நாட்பட்ட மற்றும் சமாளிக்க இயலாத வலியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பயனளிக்கும் சிகிச்சை முறை செய்யப்பட்டுள்ளது.