உடலின் மிக முக்கியமான உறுப்பாக இருக்கும் மூளை, எந்த வேலையையும் செய்வதற்கும் உடல் உறுப்புகளுக்கு கட்டளையிடுவதில் தொடங்கி முழு உடலை கட்டுப்படுத்துகிறது. ஆனால், சில சமயங்களில் நமக்கே தெரியாமல் நாம் பின்பற்றும் சில அன்றாட பழக்கங்களை மூளையை சேதப்படுத்துகிறது என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் பழக்கங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
அதிக நேரம் அமர்ந்திருப்பது:ஹார்வர்ட் ஹெல்த் ஆராய்ச்சியில், சராசரி வயதுடையவர்கள் ஒரு நாளைக்கு ஆறரை மணி நேரம் அமர்ந்திருப்பதாகவும், இது மூளையில் பல விளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறிந்துள்ளது. மேலும், அதிக நேரம் அமர்வது, மூளையில் நினைவாற்றலுக்கு தொடர்பான நரம்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இந்த பிரச்சனையை தடுக்க ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 5 நிமிட இடைவேளி எடுத்து ஸ்ட்ரெச்சிங், நடப்பது, ஸ்க்வாட்ஸ், புஷ்- அப் போன்றவற்றை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தூக்கமின்மை: மூன்றில் ஒரு பங்கு மனிதர்கள் போதிய தூக்கம் இல்லாமலும், ஏழு முதல் எட்டு மணி நேரம் தடையின்றி தூங்குவது இல்லை என அமெரிக்காவின் CDC நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய தூக்கம் இல்லாதது, அறிவாற்றல் திறன்களை குறைப்பதற்கு வழிவகிக்கிறது.சரியான மூளை செயல்பாடுக்கு தூங்குவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இரவு தூங்கும் நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி திரைகளில் இருந்து விலகி வாசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர்.
தனிமையில் அதிக நேரம் செலவிடுவது: நவீன வாழ்க்கை முறையின் அழுத்தங்களால், மனிதர்களுடன் நேரத்தை செலவிடுவதை தவிர்த்து பலரும் தனிமையில் நேரத்தை செலவிட ஏங்குகிறார்கள். தூக்கமின்மை மூளைக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்க கூடியதோ அதே அளவிற்கு தனிமையும் மூளையை பாதிக்கும்.
நீங்கள் தொடர்ந்து மற்றவர்களுடன் இருக்கும்போது, உங்கள் மூளை சமூக தொடர்புகளிலிருந்து தூண்டுதலைப் பெறுகிறது. இதுவே, தனியாக இருக்கும்போது, உங்கள் மூளைக்கு அதே தூண்டுதல் கிடைக்காது என்பதால் இவை, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் டிமென்ஷியாவுக்கு கூட வழிவகுக்கும். உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தவறாமல் நேரத்தை செலவிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.