சென்னை: இயக்குநர் ராதாமோகன் உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர். இவர் தற்போது முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸ், நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான பாணியில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் கலக்கலான காமெடியாக உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சீரிஸின் கதை, இரண்டு உணவகங்களைச் சுற்றி நகர்கிறது. முதலாவது, நிழல்கள் ரவியின் குடும்பத்திற்குச் சொந்தமான "அமுதா கஃபே" என்ற பாரம்பரிய ஹோட்டல், ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்கு கிடைக்கும் சுவையான சாம்பாருக்காகவே திரும்பத் திரும்ப ஹோட்டலுக்கு வருகை தருகிறார்கள்.
அடுத்ததாக யோகி பாபு தள்ளு வண்டியில் நடத்தும் ஒரு சிறிய சாலையோர உணவகமான 'அமுதா உணவகம்'. இங்குள்ள சட்னிக்கு, தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த இரு உணவகங்களுக்கு இடையேயான போட்டியை மையப்படுத்தியே இந்த சீரிஸ் அமைந்துள்ளது.
இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடிக்கிறார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் 'கயல்' சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.